பழனி முருகன் கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை விழா

பழனி முருகன் கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை விழாவையொட்டி தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம், கால பூஜை தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பழனி முருகன் கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை விழா
Published on

பழனி முருகன் கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி மலைக்கோவிலில் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம், கட்டளை தரிசனம், கால பூஜை தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 6 மணிக்கு மலைக்கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளினார். அவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சின்னக்குமாரர் கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். தொடர்ந்து இரவு 7.15 மணிக்கு சின்னகுமாரர் தங்கரதத்தில் எழுந்தருளினார். தங்கரத புறப்பாட்டுக்கு 48 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி தங்கரத புறப்பாட்டில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா ஆகியோர் செய்திருந்தனர்.

இதே போல் தாண்டிக்குடியில் உள்ள பாலமுருகன் கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை விழாவையொட்டி சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். பின்னர் முருகன் பூ அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பின்பு கோவிலை சுற்றி சாமி வலம் வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com