

ஆடி வெள்ளிக்கிழமை என்பது அம்மனுக்கு சிறப்பு வாய்ந்தாகும். மேலும் ஆடி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் இருந்து தங்களுடைய கணவர் நல்ல ஆயுளுடன் வாழ வேண்டும் என்று பெண்கள், சுமங்கலி பூஜை நடத்துவது வழக்கம்.
நெல்லையப்பர் கோவிலில் சேவாபாரதி அமைப்பின் சார்பில் நேற்று ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி 1,008 பெண்கள் சுமங்கலி பூஜை நடத்தினர்.
நேற்று காலையில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 10 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் வரலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஞ்சள் கயிறு, வளையல் உள்ளிட்ட மங்கள பொருட்கள் படைத்து சிறப்பு வழிபாடு நடந்தது.
வரலட்சுமி விரதம் இருந்த 1,008 சுமங்கலி பெண்களும் தரையில் அமர்ந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். இந்த சுமங்கலி பூஜையானது குடும்பத்தில் நன்மை, மாங்கல்ய பாக்கியம், மழைவளம், குழந்தைபேறு, கன்னிபெண்களுக்கு விரைவில் திருமணம் ஆகியவை வேண்டி நடந்தது. இந்த பூஜையில் ஏராளமான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு உள்ளிட்ட மங்கலபொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.