நரசிம்மர் ஜெயந்தி வழிபாடும் பலன்களும்

விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு கடன் தொல்லை, எதிரி பகை, வறுமை நீங்கும்.
நரசிம்மர் ஜெயந்தி வழிபாடும் பலன்களும்
Published on

தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும், உலகத்தை காக்கவும் மகாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்துள்ளார். அவற்றில் 10 அவதாரங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த தசாவதாரங்களில் நான்காவது அவதாரமாகவும், அனைத்து மக்களாலும் போற்றப்படுவதாகவும் நரசிம்மர் அவதாரம் உள்ளது.

தன் பக்தனின் துயர் துடைத்து காக்க பெருமாள் எடுத்த அவதாரமே, நரசிம்ம அவதாரம் ஆகும். இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்ற தத்துவத்தை உலகத்துக்கு உணர்த்தியவர், நரசிம்மர். இவர் அவதரித்த நாளையே நரசிம்மர் ஜெயந்தி' என்று கொண்டாடப்படுகிறது.

முன்னொரு காலத்தில் இரணியகசிபு என்ற அசுரன் இருந்தான். அவன் கடுந்தவம் புரிந்து பிரம்மதேவரிடம் இருந்து பல அரிய வரங்களை பெற்றான். அதாவது, தேவர்களாலோ, மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ, வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ தனக்கு மரணம் ஏற்படக்கூடாது எனும் வரம் பெற்றான். இதனால் இரணியன் மூவுலகையும் ஆட்டிப்படைத்தான். நானே கடவுள், தன்னையே அனைவரும் வழிபட வேண்டும் என்றான். இதனால் தேவர்களும், முனிவர்களும் மிகவும் துன்பம் அடைந்தனர்.

இரணியனுக்கு பிரகலாதன் என்ற மகன் இருந்தான். சிறுவயதிலேயே பிரகலாதன், நாராயணன் மீது அதிக பக்தி கொண்டிருந்தான். எப்போதும், 'ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இருந்தான்.

இதனால் கோபம் அடைந்த இரணியன், 'நாராயணனை வணங்கக்கூடாது, என்னையே வணங்க வேண்டும்' என்று வற்புறுத்தினான். ஆனால் பிரகலாதன், 'இறைவன் நாராயணன் மட்டுமே. அவரையே வணங்குவேன்' என்றான்.

இதனால் மேலும் கோபம் அடைந்த இரணியன், பிரகலாதனுக்கு பல கொடுமைகள் செய்தான். மகன் என்றும் பாராமல் கொல்லவும் துணிந்தான். ஆனால் இறைவன் அருளால், இரணியனின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. பிரகலாதன் நாராயணனை தொடர்ந்து வணங்கினான்.

ஒரு நாள் இரணியன் பிரகலாதனிடம் “எப்போதும் நாராயணனையே வணங்குகிறாயே, உனது இறைவன் எங்கே இருக்கிறார்” என்று கோபத்துடன் கேட்டான். அதற்கு பிரகலாதன் “அவர் எங்கும் நிறைந்து இருப்பார். தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்” என்றான். உடனே இரணியன் அருகில் இருந்த தூணை காட்டி 'இந்த தூணில் உனது இறைவன் இருப்பானா' என்று கேட்க, பிரகலாதன் 'நிச்சயமாக இருப்பார்' என்றான். அப்போது இரணியன் தனது கையில் இருந்த கதாயு தத்தால் அந்த தூணை ஓங்கி உடைத்தான்.

உடனே அந்த தூணை பிளந்து கொண்டு, சிங்க முகமும், மனித உடலும் கொண்டு கர்ஜனையுடன் நரசிம்மர் வெளிப்பட்டார். இரணியனின் வரத்தின்படியே, தேவராகவோ, மனிதராகவோ, விலங்காகவோ இல்லாமல் அனைத்தும் கலந்த கலவையாக நரசிம்மர் அவதரித்தார். பகலும், இரவும் இல்லாமல் அந்தி நேரத்தில், வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் இல்லாமல் வாசற்படியில் வைத்து, எவ்வித ஆயுதங்களுமின்றி, தன் நகத்தினை கொண்டு நரசிம்மர் இரணியனை வதம் செய்தார். அவனின் ரத்தம் ஒரு சொட்டு கூட கீழே விழாமல் உறிஞ்சி, குடலை மாலையாக அணிந்துகொண்டார்.

அதன்பின்பும், நரசிம்மர் ஆக்ரோஷமாக இருந்தார். இதையடுத்து சிவபெருமான் சரபேஸ்வரர் அவதாரம் எடுத்து நரசிம்மரை சாந்தப்படுத்த, நரசிம்மர் லட்சுமி தாயாரை மடியில் அமர்த்தி ‘லட்சுமி நரசிம்ம'ராக காட்சி அளித்தார். இவ்வாறு நரசிம்மர் அவதரித்த தினத்தையே 'நரசிம்மர் ஜெயந்தி' என்று கொண்டாடுகிறோம்.

இந்த ஆண்டு சித்திரை மாதம் 17-ந் தேதி (30-4-2026) வியாழக்கிழமை நரசிம்மர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விரதம் இருக்க விரும்புபவர்கள், அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு நரசிம்மர் படத்துக்கு மலர் மாலை சூட்டி விளக்கேற்றி வழிபட வேண்டும். பால், சர்க்கரை பொங்கல், பானகம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். நரசிம்மருக்கு உரிய மந்திரங்களை சொல்ல வேண்டும். அருகில் உள்ள நரசிம்மர் அல்லது பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு கடன் தொல்லை, எதிரி பகை, வறுமை நீங்கும். எதிர்மறை எண்ணங்கள் விலகும். மன வலிமை அதிகரிக்கும், தன்னம்பிக்கை கூடும். பலவிதமான நன்மைகள் கிடைக்கும். எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து ஒளிமயமான எதிர்காலம் அமையும்.

X

Maalai Malar
www.maalaimalar.com