

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக நரசிம்மராக எழுந்தருளி இருந்தால் இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்த நிலையில் இருப்பார். உக்கிர நரசிம்மர் அல்லது லட்சுமி நரசிம்மராக இருந்தால் ஒரு காலை மடக்கி வைத்துவிட்டு மறு காலை தொங்கவிட்ட நிலையில் இருப்பார். லட்சுமி நரசிம்மர் கோலத்தில் லட்சுமி தேவியை மடியில் அமர்த்தியபடி இருப்பார். ஆனால் தெலுங்கானா மாநிலம் யாதகிரிகுட்டா எனும் ஊரில் அமைந்துள்ள தலத்தில் லட்சுமி நரசிம்மர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு லட்சுமி தேவியும், நரசிம்ம பெருமாளின் இடது பக்கத்திலேயே நின்ற கோலத்தில் உள்ளார்.
திரேதா யுகத்தில் யாத ரிஷி எனும் முனிவர் வாழ்ந்து வந்தார். இவர் அனுமனின் அருள் பெற்று, நரசிம்மரை நினைத்து இப்பகுதியில் உள்ள குகையில் கடும் தவம் இயற்றினார். முனிவரின் தவத்தில் மகிழ்ந்த நரசிம்மர், அவருக்கு ஐந்து வடிவில் காட்சி கொடுத்தார். ஜ்வால நரசிம்மர், யோக நரசிம்மர், உக்கிர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், கந்தபெருண்ட நரசிம்மர் ஆகியவை அந்த ஐந்து வடிவங்கள் ஆகும். எனவே இக்கோவில் 'பஞ்ச நரசிம்ம தலம்' என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் ஐந்து நரசிம்ம வடிவங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் லட்சுமி நரசிம்மர். இவரை மனதார நினைத்து வழிபட்டால் எத்தகைய நோயாக இருந்தாலும் குணமாகி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. எனவே இவர் 'வைத்திய நரசிம்மர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.