

'குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்காதே’ என்பது நம் முன்னோர்களின் வாக்கு. நாம் எத்தனையோ புண்ணிய தலங்களுக்குச் சென்று, பல தெய்வங்களை வழிபட்டாலும், நம் பரம்பரையைக் காக்கும் குலதெய்வ வழிபாடே எல்லாவற்றிலும் முதன்மையானது.
குலதெய்வம் என்பது நம் குலத்தை, அதாவது நமது பரம்பரையை காக்கும் தெய்வமாகும். நம் முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வந்த தெய்வம் இது. பெற்ற தாய் போன்று, பிள்ளைகள் கேட்காவிட்டாலும் 'என்ன தேவை' என்பதை அறிந்தும், கஷ்டங்களைச் சொல்லாமலேயே தீர்த்து வைக்கும் சக்தி குலதெய்வத்திற்கு மட்டுமே உண்டு.
எனவே எந்தக் காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிகமிக முக்கியம். வேரின்றி மரங்கள் செழிப்பதில்லை; அதுபோல குலதெய்வ வழிபாடின்றி நம் வாழ்வு சிறப்பதில்லை.
குலதெய்வ சன்னிதானத்தில் நின்று வழிபடும்போது, நமது முன்னோர்களின் ஆசியும் நமக்கு கிடக்கும். ஏனென்றால் நம் முன்னோர்களும் அதே குலதெய்வத்தின் சன்னிதியில்தான் கைகூப்பி நின்று வழிபட்டிருப்பார்கள்.
ஜாதகத்தில் எவ்வளவு தோஷங்கள் இருந்தாலும், குலதெய்வத்தின் அருள் இருந்தால் அந்தத் துன்பங்கள் நம்மைப் பாதிக்காது. அதே சமயம், குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற எந்தத் தெய்வங்களின் அருளும் நமக்குக் கிடைக்காது. குடும்பத்திற்கு ஒரு பாதுகாப்பு கவசமாக நின்று நம்மை காப்பது குலதெய்வமே ஆகும்.
வீட்டில் எந்தவொரு சுபகாரியத்தைத் தொடங்குவதற்கு முன்பும் குலதெய்வத்தை மனதார வணங்கினால், தடைகள் அனைத்தும் நீங்கி வெற்றி உண்டாகும். எனவே, வருடத்திற்கு ஒரு முறையாவது குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்குச் சென்று வணங்கி, வாழ்வில் மகிழ்ச்சி பொங்க வளமோடு வாழ்வோம்.