சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தின் போது கூடியிருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை காணலாம்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தின் போது கூடியிருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை காணலாம்.
Published on

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆருத்ரா தரிசனம் தருவதற்காக மூலவர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேரில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தொடர்ந்து சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று அதிகாலை 2 மணி முதல் தொடங்கியது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்து, திருவாபரண அலங்கார காட்சி நடைபெற்றது.

பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. தொடர்ந்து மதியம் 1.25 மணி அளவில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்து ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு காட்சி கொடுத்தனர்.

இதையடுத்து மாலை 4 மணி அளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் பல்லக்கில் எழுந்தருளி சித்சபைக்கு புறப்பட்டனர். அதில் பல்லக்கில் ஆடல் அரசன் நடராஜர் நடன பந்தலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி தரிசனம் அளித்த கண்கொள்ளா காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

அந்த சமயத்தில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல், அங்கு திரண்டிருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மழையில் நனைந்தபடியே பக்தி கோஷங்களை எழுப்பி நடராஜரை தரிசித்தனர். இதையடுத்து மாலை 4.15 மணி அளவில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கோவில் உட்பிரகாரத்துக்கு வந்தனர். அங்கு கருவறையில் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.

வழக்கமாக தரிசனம் மதிய நேரத்திலே நடந்து முடிந்துவிடும். அதே போல் இந்த முறையும் 2 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தாமதமாக மாலை 4.15 மணி அளவில் தான் நடராஜரின் தரிசனத்தை பக்தர்கள் பெற முடிந்தது.

விழாவில் இன்று (திங்கட்கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலா காட்சியும், நாளை (செவ்வாய்க்கிழமை) தெப்ப உற்சவமும் நடக்கிறது. அத்துடன் ஆருத்ரா தரிசன விழா நிறைவுபெறுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com