கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கின

மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார், பத்ரகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கின.
பத்ரகாளியம்மன் கோவிலில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியபோது எடுத்தபடம்.
பத்ரகாளியம்மன் கோவிலில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியபோது எடுத்தபடம்.
Published on

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார், பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டு, கோபுரங்கள், பிரகார மண்டபம் உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இந்தநிலையில் பணிகள் முடிவடைந்ததை அடுத்து வருகிற 4-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மேலும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் 29-ந்தேதி(நேற்று) தொடங்கி 4-ந்தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்தநிலையில் நேற்று காலை கணபதி ஹோமத்துடன் பத்ரகாளியம்மன் கோவில் எதிரே யாகம் வளர்க்கப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கின. பின்னர் கஜபூஜை, கோமாதா பூஜை செய்யப்பட்டு கோவிலின் வடக்கு வாசல் திறக்கும் பூஜையும் நடைபெற்றது. யாகசாலை பூஜையில் கோவில் உதவி ஆணையாளர் இளையராஜா, அறங்காவல் குழு தலைவர் ஜெய்சங்கர், அறங்காவல் குழு உறுப்பினர்கள் சீனிவாசன், பாஸ்கரன், சரவணன், கமலசிகாமணி மற்றும் கிராமமக்கள் கலந்துகொண்டனர். யாகசாலை பூஜையை பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் மணிசேகரசிவம் மற்றும் பக்தர்கள் நடத்தினார்கள்.

இந்த யாகசாலை பூஜைகள் முடிவடைந்ததை தொடர்ந்து 4-ந்தேதி காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. யாகசாலை பூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com