அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீ மிதி விழா ரத்து செய்யப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் பராசக்தி அம்மன், விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சிறப்பு அலங்காரத்தில் பராசக்தி அம்மன், விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
Published on

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாக அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. இதில் கார்த்திக்கை தீப திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் போன்றவை முக்கியமானவை. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கோவிலில் நடைபெறும் அனைத்து பூஜைகளும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை சுமார் 5.30 மணியளவில் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

பின்னர் உண்ணாமலை அம்மன் கோவில் முன்பு உள்ள தங்க கொடிமரத்தின் முன்பு பராசக்தி அம்மன் மற்றும் விநாயகரை கொண்டு வந்தனர். அம்மன் முன்னிலையில் மங்கள வாத்தியங்கள் முழங்க சுமார் 7 மணியளவில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.

இந்த விழா 10 நாட்கள் நடைபெறும். விழாவின் கடைசி நாளில் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறும்.

ஆனால் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொடியேற்றத்தன்றே பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் வரும். அதேபோல் இந்த ஆண்டு பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும் கொடியேற்ற நாளான நேற்று நடந்தது. அதேபோல் நேற்று நடைபெற இருந்த தீ மிதி விழா கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் நிர்வாகம் மூலம் ஆன்லைனில் ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து விழா நாட்களில் பராசக்தி அம்மன் உற்சவ ஊர்வலம் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் நடைபெறும்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com