அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்?

ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் படைப்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
Koozh
Published on

இன்றைய காலகட்டத்தில் நாம் செய்யும் சில விஷயங்களை எந்தவித காரணமும் தெரியாமல் செய்கிறோம். ஆனால், நம்முடைய முன்னோர்கள் அப்படி அல்ல. அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னும் ஒரு காரணம் மறைந்திருக்கும். அவற்றில் ஒன்றுதான் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது.

ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் படைப்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. வெப்பமும் காற்றும் இணைந்திருக்கும் மாதம் ஆடி. வெப்பம் குறைந்து காற்றில் கொஞ்சம் குளுமை பரவியிருக்கும் மாதம் இது. இந்தச் சமயத்தில் உடல் உஷ்ணமான நோய்கள் தாக்கக் கூடும் என்பதால்தான், அம்மன் வழிபாடு ஆடி மாதத்தில் செய்யப்படுகிறது.

பூஜை

அதேபோல், அம்மனுக்கு பூஜைகளும் வழிபாடுகளும் வீட்டில் செய்யப்படுகின்றன. இந்த நாளில் வீட்டை சுத்தமாக வைத்திருக்கப் பழக்கப்படுத்தினார்கள். தலைக்கு குளிப்பதும் பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளிப்பதும் வழக்கமாயிற்று.

ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, வரலட்சுமி பூஜை என்றெல்லாம் பூஜைகளும் புனஸ்காரங்களும் அமர்க்களப்பட, அதற்கேற்ற உணவு வகைகளைச் சமைத்துச் சாப்பிட வலியுறுத்தினார்கள் முன்னோர்கள்.

விரதம்

சில பண்டிகைகளை, விரதம் மேற்கொண்டு செய்யச் சொன்னார்கள். சில பூஜைகளின் போது, இன்னன்ன பழங்களைப் படையலிட வலியுறுத்தினார்கள். இன்னன்ன வகை இனிப்புகளைச் செய்யச் சொல்லி வழிபட அறிவுறுத்தினார்கள்.

ஆடி மாத வழிபாடு

ஆடி மாத வழிபாடுகளில், மாவிலையும் வேப்பிலையும் தவறாமல் இடம்பிடித்தன. மாவிளக்கேற்றி வழிபடுவதும் எலுமிச்சை சாதம், எலுமிச்சை தீபம் முதலானவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்ததும் நோயில் இருந்தும் நோய்க்கிருமியில் இருந்தும் காப்பதற்குத்தான் வழிமுறைப்–படுத்தப்பட்டன.

ஆடி மாத அம்மன் பிரசாதங்களில் முக்கியமானது கூழ். உடலையும் வயிற்றையும் குளிர்ச்சிப்படுத்தும் உன்னதமான பிரசாதம் கூழ். ஆடி மாதம் முழுவதுமே, அம்மனுக்கு இந்தக் கூழைச் செய்து படைத்து பின்னர் விநியோகிப்பது ரொம்பவே விசேஷம். மிகுந்த பலன்களையும் வரங்களையும் தரக்கூடியது.

வேப்பிலை

ஆடி மாதத்தில் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால் காய்ச்சல், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதை தவிர்க்கவே மாரியம்மன் கோவில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள். இதை ஆடிக்கஞ்சி என்பர். இதில் வேப்பிலை கலந்து தருவதால் அம்மனின் அருள் பிரசாதமாகவும், நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் கருதி மக்கள் கொண்டாடுகிறார்கள்.

உங்களால் முடிந்தது... ஒரு பத்துப்பேருக்கேனும் கூழ் வார்த்துக் கொடுங்கள். உங்கள் வாழ்க்கையையே குளிரப்பண்ணுவாள் மகாசக்தி அம்மன்!

X

Maalai Malar
www.maalaimalar.com