ஆனி மாதமும் ஆன்மிக சிறப்புகளும்

ஆனி மாதம் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு 'பகவதாஷ்டமி' என்ற பெயர் உண்டு.
ஆனி மாதமும் ஆன்மிக சிறப்புகளும்
Published on

தமிழ் மாதங்களில் மூன்றாவது மாதமாக ஆனி மாதம் வருகிறது. ஆனி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது நடராஜப் பெருமானுக்குரிய ஆனி திருமஞ்சனம் தான். ஆனால் அதையும் தாண்டி, இம்மாதம் ஆன்மிக ரீதியாக பல சிறப்புகளை கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்...

ஆனி மாதம்

* உத்திராயண புண்ணிய காலத்தின் கடைசி மாதமாக ஆனி மாதம் கருதப்படுகிறது. எனவே, இம்மாதம் தேவர்களுக்கு மாலைப் பொழுதாக உள்ளது.

* மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் இரண்டாவது அவதாரமாக கூர்ம அவதாரம் கருதப்படுகிறது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது, மத்தாக பயன்படுத்திய மந்தார மலை கடலில் மூழ்காமல் தடுக்க, மகாவிஷ்ணு எடுத்த அவதாரமே கூர்ம அவதாரம் ஆகும். விஷ்ணு, பிரமாண்ட ஆமை வடிவம் எடுத்து, மந்தார மலையை தன் முதுகில் தாங்கினார் என புராணங்கள் கூறுகின்றன. இந்த கூர்ம அவதாரம் ஆனி மாதத்தில் நிகழ்ந்ததாக கருதப்படுகிறது.

வராக நவராத்திரி

* இந்து சமயத்தில், வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி என நான்கு விதமான நவராத்திரிகள் உள்ளன. இதில் ஆஷாட நவராத்திரி, ஆனி மாதம் அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதை 'வராக நவராத்திரி' என்றும் அழைப்பர்.

தேய்பிறை அஷ்டமி

* ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு பிறகு வரும் எட்டாவது நாள் 'தேய்பிறை அஷ்டமி' எனப்படுகிறது. ஆனி மாதம் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு 'பகவதாஷ்டமி' என்ற பெயர் உண்டு. இந்நாளில் சிவபெருமானையும், சிவனின் அம்சமான பைரவரையும் வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் எல்லா இன்னல்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

நிர்ஜல ஏகாதசி

* ஆனி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசி, 'நிர்ஜல ஏகாதசி' என்று போற்றப்படுகிறது. இந்நாளில் தண்ணீர், உணவு ஏதும் அருந்தாமல் முழுமையாக விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவது வழக்கம். இது, வருடம் முழுவதும் வரும் ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரும் என்பது ஐதீகம். இந்த விரதத்தை பீமன் கடைப்பிடித்ததால் 'பீம ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகிறது.

* பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்திலும், திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் ஆனி மாதம் மூல நட்சத்திரத்திலும், நாதமுனிகள் ஆனி மாதம் அனுஷ நட்சத்திரத்திலும் அவதரித்ததாக கூறப்படுகிறது.

ஜேஷ்டாபிஷேகம்

* ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் வைணவ தலங்களில் ஜேஷ்டாபிஷேகம் கொண்டாடப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் மூன்று நாட்கள் வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. கேட்டை நட்சத்திரத்திற்கு 'ஜேஷ்டா நட்சத்திரம்' என்ற பெயர் உண்டு. எனவே இந்நாளில் செய்யப்படும் அபிஷேகம் 'ஜேஷ்டாபிஷேகம்' என்று அழைக்கப்படுகிறது. ஜேஷ்டா நட்சத்திரத்திற்குரிய தெய்வமாக இந்திரன் கருதப்படுகிறார். எனவே இந்நாளில் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகத்தை தரிசனம் செய்தால் இந்திரனை போல வாழ்வு அமையும், தலைமைப் பதவி தேடி வரும்.

மாணிக்கவாசகர் குருபூஜை

* சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகரின் குருபூஜை, ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திருவாசகம், திருவெம்பாவை பாடல்கள் ஓதப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

ஆனி பவுர்ணமி

* ஆனி மாதம் பவுர்ணமி நாளன்று, புதுச்சேரி காரைக்காலில் உள்ள கைலாசநாதர் கோவிலில் புகழ்பெற்ற மாங்கனி திருவிழா கொண்டாடப்படுகிறது. அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இத்திருவிழா நடத்தப்படுகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பிச்சாண்டவர் (சிவபெருமான்) வீதி உலா வரும் போது, பக்தர்கள் இறைவன் மீது மாம்பழத்தை வீசி வழிபடுவார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com