

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு மேட்டூர் காவிரி ஆற்றுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடுவார்கள். அது மட்டுமின்றி புதுமண தம்பதிகளும் காவிரி ஆற்றில் நீராடுவார்கள். இவர்கள் நீராடிய பின்னர் மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் சாமியை தரிசனம் செய்து விட்டு வீடு திரும்புவார்கள்.
இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் மேட்டூர் அணைக்கு போதிய அளவு தண்ணீர் வரவில்லை. இதனால் நீர்மட்டம் மிகவும் குறைந்து உள்ளது. நேற்று 25.21 அடி தண்ணீர் இருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால் இந்த ஆண்டு போதிய தண்ணீர் இல்லாததால் கடந்த மாதம் 12-ந்தேதி டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. நேற்று வரை தண்ணீர் திறப்பு இல்லை. ஆனால் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படாததால் காவிரி ஆற்றில் மிகக்குறைந்த அளவு தண்ணீரே செல்கிறது. எங்கு பார்த்தாலும் பாறைகளாவும், மண் திட்டுகளாவும் காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக மேட்டூருக்கு வந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைவாக இருந்தது.
காவிரி ஆற்றில் மக்கள் குளிக்கும் படித்துறை பகுதிகளில் குறைந்த அளவு கூட்டமே காணப்பட்டது.