3வது ஒருநாள் போட்டி - பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே

ராவல்பிண்டியில் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே அணி.
சதமடித்த வில்லியம்ஸ்
சதமடித்த வில்லியம்ஸ்
Published on

ராவல்பிண்டி:

ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இரண்டு ஒருநாள் போட்டிகளில் வென்ற பாகிஸ்தான் அணி 2-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். 22 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து தத்தளித்தது 

அடுத்து இறங்கிய பிரெண்டன் டெய்லர், சீன் வில்லியம்ஸ் நிதானமாக ஆடினர். டெய்லர் அரை சதமடித்தார். அவர் 56 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய மதாவீர் 33 ரன்னும், ரசா 45 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் வில்லியம்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 118 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், ஜிம்பாப்வே அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தான் சார்பில் மொகமது ஹசைன் 5 விக்கெட்டு வீழ்த்தினார்.

இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. 

தொடக்க ஆட்டக்காரர்களான இமாம் உல் ஹக் 4 ரன்னிலும், பக்ர் சமான் 2 ரன்னிலும்  அவுட்டாகினர்.

அடுத்து இறங்கிய கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவருக்கு மற்ற வீரர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

கடைசி கட்டத்தில் இறங்கிய வஹாப் ரியாஸ் அரை சதமடித்து, 52 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 278 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி சமனானது.

ஜிம்பாப்வே சார்பில் பிளெசிங் முசாராபானி 5 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் 2 விக்கெட் இழப்புக்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணி 5 ரன்கள் எடுத்து சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. இந்த ஆறுதல் வெற்றி மூலம் 1-2 என தொடரை நிறைவு செய்துள்ளது.

ஆட்ட நாயகன் விருது ஜிம்பாப்வே வீரர் பிளெசிங் முசாராபானிக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு அளிக்கப்பட்டது.

இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 7-ம் தேதி தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com