

திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூரை சேர்ந்தவர் மகேஷ்குமார் (வயது 20). நேற்று முன் தினம் மாலை அவரை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்து உடலை அங்குள்ள ஏரிக்கரை அருகே புதைத்தனர்.
அப்போது ஆடு, மாடு மேய்க்கும் தொழிலாளர்கள் வந்ததால் மகேஷ்குமார் உடலை பாதி புதைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து மகேஷ்குமார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில் ஒருதலை காதல் விவகாரத்தில் மகேஷ் குமாரை நண்பர்களே அடித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
மகேஷ்குமார் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து அடிக்கடி பேசி வந்தார். இது அவரது நண்பர்களுக்கு பிடிக்கவில்லை.
எனவே இந்த காதல் விவகாரத்தை கைவிடும்படி வற்புறுத்தினர். ஆனால் மகேஷ்குமார் இதனை கேட்கவில்லை. மகேஷ் குமாரின் குடும்பத்தினர் முதலில் திருவள்ளூரை அடுத்த பாண்டூரில் வசித்து வந்தனர்.
பின்னர் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு மேல்நல்லாத்தூருக்கு வந்ததாக தெரிகிறது.
இதையடுத்து மகேஷ் குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். நேற்று முன்தனம் போதையில் இருந்த மகேஷ்குமாரை நண்பர்கள் அடித்து கொன்று உள்ளனர். பின்னர் உடலை புதைக்க முயன்றபோது தப்பி இருக்கிறார்கள்.
இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த மகேஷ்குமாரின் நண்பர்கள் அஜித்குமார், சிவா என்கிற சிவசங்கரன், கார்த்திக், விக்னேஷ், தினேஷ் ஆகிய 5 பேர் எழும்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
மேலும் சுகுமார், மணி பாரதி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் கொலை நடந்தது எப்படி? கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
இதேபோல் கோர்ட்டில் சரண் அடைந்த 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். அப்போது மேலும் பரபரப்பு தகவல் வெளிவரும் என்று தெரிகிறது.