தூத்துக்குடி வாலிபர் கொலையில் ரவுடி கைது - மேலும் 3 பேருக்கு வலைவீச்சு

தூத்துக்குடி வாலிபர் கொலையில் தொடர்புடைய ரவுடியை கைது செய்த போலீசார் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி வாலிபர் கொலையில் ரவுடி கைது  - மேலும் 3 பேருக்கு வலைவீச்சு
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி அந்தோணி யார்புரம் 3 சென்ட் பகுதியை சேர்ந்த தொழிலாளி பாலமுருகன். இவரது மகன் அஜித்குமார் (வயது21). கோவையில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்தார்.

பாலமுருகன் தூத்துக்குடி ராஜபாண்டி நகரில் வசித்த போது அவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக இருவர் குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அஜித்குமார் தூத்துக்குடி வந்தார். அப்போது அவருக்கும் சங்கரின் மகன் பாரதி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாரதி, சங்கர் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து அஜித்குமாரை வாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர் உள்ளிட்ட 4 பேரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் சங்கரை போலீசார் இன்று கைது செய்தனர். சங்கர் மீது ஏற்கனவே கஞ்சா கடத்தியது உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக தென்பாகம், தெர்மல்நகர் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com