மேட்டுப்பாளையம் வாலிபர் கொலையில் மேலும் ஒருவர் கைது

மேட்டுப்பாளையம் வாலிபர் கொலையில் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

புதுச்சேரி:

புதுவை மேட்டுப்பாளையம் ராம்நகர் விரிவாக்கம் இந்திராநகரை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 24). இவர் கடந்த 4-ந்தேதி கொலை செய்யப்பட்டு உடல் கோரிமேடு தீயணைப்பு வளாகத்தில் கிடந்தது.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஜெயபாலை அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (21) மற்றும் அவரது கூட்டாளிகளான பூபதி (21), லட்சுமணன் (24), அய்யனார் (24), யோகேஷ் (19) ஆகியோரை மடக்கி பிடித்தனர்.

பன்னீர் செல்வத்திடம் நடத்திய விசாரணையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு ஜெயபால் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பன்னீர் செல்வத்தை தாக்கி அவரை கோரிமேடு தீயணைப்பு நிலைய வளாகத்தில் வீசி சென்றதும், இதனால் பழிக்குப்பழி வாங்க ஜெயபாலை கொலை செய்து அவரது உடலை அதே இடத்தில் வீச திட்டம் வகுத்ததாகவும், சம்பவத்தன்று வீட்டில் தூங்கிய ஜெயபாலை தரதரவென்று இழுத்து சென்று அவரது வீட்டின் எதிரே உள்ள காலி மனையில் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு உடலை தீயணைப்பு வளாகத்தில் வீசியதாக பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து பன்னீர் செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இதற்கிடையே ஜெயபாலை கொலை செய்து விட்டு பன்னீர்செல்வம் தனது கூட்டாளிகளுடன் மோட்டார் சைக்கிளில் திருக்கனூர் சென்று அங்கு ஜெயகுரு என்பவரிடம் அடைக்கலமானது தெரிய வந்தது.

இதையடுத்து கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த ஜெயகுருவை போலீசார் கைது செய்தனர். மேலும் ஜெயபாலை கொலை செய்ய பயன்படுத்திய 3 வீச்சரிவாள், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 செல்போன்களை ஜெயகுருவிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com