

மதுரை:
நிபந்தனை ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக போலீஸ் நிலையம் வந்தவர் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மதுரை செல்லூர் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ஜெயம். இவரது மகன்கள் அஜீத் (வயது 23), ரஞ்சித் (25). இவர்கள் கடந்த மாதம் பீ.பி.குளம் இந்திரா நகரில் காதல் தகராறு தொடர்பாக அடிதடியில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கில் 2 பேரும் கைதானார்கள். பின்னர் அவர்கள் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
அதன்படி சகோதரர்கள் இருவரும் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தனர். இன்று பகல் 11 மணி அளவில் அவர்கள் கையெழுத்திடுவதற்காக தல்லாகுளம் போலீஸ் நிலையம் நோக்கி சென்றனர்.
பெசண்ட் ரோடு பகுதியில் நடந்து சென்றபோது 3 இருசக்கர வாகனங்களில் 7 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்களை கண்டதும் அஜீத் மற்றும் ரஞ்சித் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் அந்த கும்பல் அவர்களை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டியது.
மர்ம கும்பலிடம் இருந்து தப்பிக்க சகோதரர்கள் இருவரும் வீதிகளில் தலைதெறிக்க ஓடினர். ரஞ்சித் தப்பிவிட்ட நிலையில் அஜீத் மர்ம கும்பலிடம் சிக்கிக்கொண்டார். சரமாரி அரிவாள் வெட்டு விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். அஜீத் இறந்ததை உறுதி செய்த பின்னர் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
பட்டப்பகலில் சினிமாவில் வருவது போல் இந்த சம்பவம் நடந்தது அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியபோது அஜீத் மற்றும் ரஞ்சித் ரத்தக்காயங்களுடன் ஓடியதை கண்ட மக்கள் அலறியடித்து ஓடினர்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில்தான் தல்லாகுளம் போலீஸ் நிலையம் உள்ளது. அதன் அருகிலேயே ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் தல்லாகுளம் போலீசார் விரைந்து சென்று அஜீத் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயத்துடன் தப்பி ஓடிய ரஞ்சித் எங்கே சென்றார் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.