

மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது மலையேற்ற பயிற்சிக்கு சென்ற சென்னை, ஈரோடு பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
தீ விபத்து குறித்து விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா மூலம் பொது மக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதனிடையே வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்கவும், விபத்து ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கவும் மத்திய வனத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஜியோகிராபிக் இன்பர்மேஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் குரங்கணி மற்றும் அதனை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் தீ விபத்து நடந்தால் உடனடியாக தகவல் கிடைத்து விடும். மேலும் எந்த இடத்தில் விபத்து நடந்துள்ளது என்பது மட்டுமின்றி தீ வைத்தவர் யார்? என்பதும் தெரிந்து விடும்.
நேற்று குரங்கணி அருகே உள்ள பொந்துகூண்டு வனப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து மத்திய வனத்துறை அமைச்சகம் பொருத்திய நவீன கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டு மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து உத்தமபாளையம் வன அலுவலர் ஜீவனா தலைமையில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். மதிகெட்டான் கானல் அருகே வனப்பகுதியில் தனியார் நிலத்தின் உரிமையாளரான ஆனைமலையான் பட்டியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 35) என்பவர் தனது தோட்டத்தை சுத்தப்படுத்துவதற்காக தீ வைத்தார். அந்த தீ வனப்பகுதிக்கும் பரவியது. இதில் ஒரு எக்டேர் வனப்பகுதி எரிந்து சேதமானது. வனத்துறையினர் காட்டுத் தீயை விரைந்து அணைத்ததுடன் விபத்துக்கு காரணமான ஆனந்தராஜையும் கைது செய்தனர்.