தாரமங்கலம் அருகே ஜவுளி அதிபரை கொல்ல முயற்சி- வாலிபர் கைது

தாரமங்கலம் அருகே தொழில் போட்டியால் ஜவுளி அதிபரை கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிப்பட்டி கோமாரியூர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 38). இவர் அதே ஊரை சேர்ந்த ஜவுளி தொழில் செய்து வரும் மணி என்பவரிடம் தொழில் கற்றுக்கொண்டார். ஜவுளி எங்கிருந்து லாபத்தில் கொள்முதல் செய்கிறார்? எப்படி வியாபரம் செய்கிறார்? புதுப்புது டிசைன்களை வாங்குவதற்கு எவ்வளவு பணம் செலவாகிறது?, கொள்முதல் செய்த துணிகளை பொதுமக்களிடம் விற்கும் முறைகள்? உள்ளிட்ட தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொண்டார். 

பின்னர் தனியாக வெளியே வந்து முத்துக்குமார் ஜவுளி தொழிலில் ஈடுபட்டார். ஊர், ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இதில் வியாபாரம் களை கட்டியது. தனக்கு கற்றுக் கொடுத்த மணியை விட வியாபாரத்தில் மிஞ்சினார். பொதுமக்கள் பலர் அவரிடம் இருந்து ஜவுளி வாங்கினர். இதனால் மணிக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. தொடர்ந்து தொழிலில் அடி மேல் அடி விழவே மணி, இது பற்றி தனது மகன் வெங்கடேஷிடம் (34) தெரிவித்து கவலைப்பட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ், சம்பவத்தன்று முத்துக்குமாரை வழிமறித்து, என்னுடைய அப்பாவிடம் தொழில் கற்றுக்கொண்டு, அவருக்கு போட்டியாக தொழில் செய்கிறாயா? என கூறி வாக்குவாதம் செய்து தலையில் கல்லால் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த முத்துக்குமார், ஓமலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். 

இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் தாரமங்கலம் போலீஸ் நிலைய சப்&இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷை கைது செய்தார். தொழில் போட்டி காரணமாக, ஜவுளி அதிபர் கல்லால் தாக்கப்பட்ட சம்பவம் ராமிரெட்டிப்பட்டி கோமாரியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com