திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய காதலன் கைது

ராஜபாளையம் அருகே திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றி, கொலை மிரட்டல் விடுத்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் ஐந்துகரை பஜார் தெருவைச் சேர்ந்தவர் பிள்ளையார். இவரது மகள் புஷ்பலதா (வயது 22). இவர் சேத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கூறியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

நானும், எங்கள் ஊரைச் சேர்ந்த முருகன் மகன் ராதாகிருஷ்ணனும் (26) சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறோம். இதனால் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.

இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு தனியாக சென்று வந்தோம். அப்போது திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகினார்.

இந்த நிலையில் ராதா கிருஷ்ணன் திடீரென திருமணம் செய்ய மறுத்தார். இதுகுறித்து கேட்டபோது அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் திவ்யா விசாரணை நடத்தி இளம்பெண்ணை ஏமாற்றிய ராதாகிருஷ்ணனை கைது செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com