புதுவையில் இருந்து கடலூருக்கு 8 கிலோ தங்க நகையுடன் பஸ்சில் வந்த வாலிபர்கள்

புதுவையில் இருந்து கடலூருக்கு 8 கிலோ தங்க நகையுடன் பஸ்சில் வந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், நகைகளை பாதுகாப்புடன் எடுத்து வருமாறு கூறி, அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
புதுவையில் இருந்து கடலூருக்கு  8 கிலோ தங்க நகையுடன் பஸ்சில் வந்த வாலிபர்கள்
Published on

கடலூர்:

கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். புதுவையில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை போலீசார் நிறுத்தி பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது பஸ்சில் வந்த 2 வாலிபர்கள் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 8 கிலோ தங்க நகைகள் இருந்தன.

இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். தங்க நகைகளை கொண்டு வந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் பெங்களூருவில் நகைப்பட்டறை வைத்து இருப்பதாகவும், அங்கு வடிவமைக்கப்படும் புதிய நகைகளை கடைகளில் காண்பித்து விற்பனை செய்வதற்காகவும், புதுவையில் இருந்து நகைகளை எடுத்து வந்ததாகவும் கூறினர். அதற்குரிய ஆவணங்களையும் போலீசாரிடம் காண்பித்தனர். அந்த வாலிபர்கள் கூறிய தகவல்கள் உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து நகைகளை பாதுகாப்புடன் எடுத்து வருமாறு கூறி, அவர்களை எச்சரிக்கை செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com