தஞ்சையில் இன்று தூணில் கட்டி வைத்த வாலிபர் கயிறு இறுக்கி பரிதாப பலி

தஞ்சையில் வீட்டில் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்தபோது எதிர்பாராதவிதமாக அதே கயிற்றால் கழுத்து இறுகி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சையில் இன்று தூணில் கட்டி வைத்த வாலிபர் கயிறு இறுக்கி பரிதாப பலி
Published on

தஞ்சாவூர்:

கும்பகோணம் அருகே ஆலமன்குறிச்சி கீழத் தெருவை சேர்ந்தவர் கண்ணையன் மகன் கார்த்திகேயன் (வயது22). தொழிலாளி. திருமணமாகவில்லை. குடிப்பழக்கம் உடையவராம்.

இந்நிலையில் நேற்று குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது கார்த்திகேயன் திடீரென வீட்டிற்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட அவரது பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் கார்த்திகேயனை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரது கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததால் டாக்டர் களின் ஆலோசனைப்படி அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று இரவு கொண்டு வந்து சேர்த்தனர்.

இந்நிலையில் அதிகாலை உறவினர்களுக்கு தெரியாமல் கார்த்தி கேயன் ஆஸ்பத்திரியை விட்டு தப்பி செல்ல முயன்றுள்ளார். இதைக்கண்ட அருகில் உள்ளவர்கள் அவரை பிடித்து வைத்துக் கொண்டனர். பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் அவர் அங்கிருந்து தப்பி முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் எங்கே வெளியில் சென்று மீண்டும் தற்கொலைக்கு முயல்வாரோ? என்ற அச்சத்தில் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள ஒரு தூணில் கார்த்திகேயனை கயிற்றால் கட்டி வைத்ததாக கூறப்படுகிறது.

அப்போது உறவினர்கள் அங்கில்லாத நேரத்தில் கயிற்றை விடுவித்து தப்பி செல்ல முயன்றுள்ளார். ஆனால் எதிர் பாராதவிதமாக ஏற்கனவே தூக்குமாட்டிய போது கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் கயிறு சிக்கிக் கொண்டு கழுத்தை இறுக்கியுள்ளது. இதில் மூச்சுத்திணறிய கார்த்திகேயன் பரிதாபமாக இறந்துள்ளார்.

பின்னர் கார்த்திகேயனின் உறவினர்கள் அங்கு வந்து பார்த்தபோது அவர் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவக்கல்லூரி வளாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் அங்கு வந்து கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்தபோது எதிர்பாராதவிதமாக அதே கயிற்றால் கழுத்து இறுகி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com