

சாம்பவர் வடகரை:
சுரண்டை அருகே சாம்பவர் வடகரை சேனையர் கீழ தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் மதன் (வயது 19). இவரது நண்பரான சாம்பவர் வடகரை தெற்கு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த சாமுவேல் சேவியர் ராஜ் (வயது 32) அதே பகுதியில் கோழிக்கடை நடத்தி வருகிறார். நேற்று மதன் நண்பரின் கோழிக்கடைக்கு சென்று குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
தகராறில் மதன் சாமுவேல் சேவியர் ராஜை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சாமுவேல் சேவியர் ராஜ் மதனை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் இருந்த மதனை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சாம்பவர் வடகரை சப்-இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சாமுவேல் சேவியர் ராஜை கைது செய்தார். ஏற்கனவே இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.