

திருச்சி:
திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வணிக வளாகம் செயல்பட்டுவருகிறது. இங்கு செல்போன், புத்தக கடைகள் மற்றும் வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்த வணிக வளாகத்தில் பகல் , இரவு என சுழற்சி முறையில் காவலாளிகள் பணியில் இருப்பார்கள்.
நேற்று முன்தினம் இரவு திருச்சி அம்பிகாபுரம் தங்கேஸ்வரி நகரை சேர்ந்த காவலாளி செந்தில்குமார் (வயது 43), பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள லிப்டின் அருகே படுத்திருந்தார்.
இந்தநிலையில் கொள்ளையடிக்கும் முயற்சியில் நள்ளிரவில் அங்கு புகுந்த மர்மநபர் திடீரென செந்தில்குமாரின் தலையில் பெரிய பாறாங்கல்லை தூக்கி போட்டுள்ளார். 4 முறை தலையில் கல்லை போட்டதால் செந்தில்குமார் பலத்த காயமடைந்து மயக்க மடைந்ததுடன் உயிருக்கு போராடினார். இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் அந்த நபர் செந்தில்குமார் சட்டைப்பையில் இருந்த பணம் மற்றும் செல்போனை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதனிடையே அருகில் பெட்ரோல் பங்க்கில் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது செந்தில்குமார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர் யாரென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்த போது, அதில் மர்ம நபரின் உருவம் பதிவாகியிருந்தது. மேலும் அவர் 4 முறை செந்தில் குமாரின் தலையில் கல்லை தூக்கி போட்டதும் தெரியவந்தது. இதனை வீடியோவில் பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவவே அதனை பார்த்த பொதுமக்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதையடுத்து வீடியோவில் பதிவாகியிருந்த மர்மநபரின் உருவத்தை வைத்து அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அந்த நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ராஜ்குமார் (25) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் சேலம் மற்றும் கரூரில் நடந்த 5 கொலைகளில் ராஜ்குமாருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.