போரூர் அருகே கல்குவாரி குட்டையில் வாலிபர் பலி

போரூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கிய வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் மதியம் அவரது உடலை மீட்டனர்.
போரூர் அருகே கல்குவாரி குட்டையில் வாலிபர் பலி
Published on

பூந்தமல்லி:

போரூரை அடுத்த பூத்த பேடு பகுதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவரது மகன் விக்னேஷ்வரன் (வயது 21). நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

விக்னேஷ்வரனுக்கு நேற்று பிறந்தநாள். இதை யடுத்து நேற்று மாலை நண்பர்கள் 5 பேருடன் அவர் மாங்காடை அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரி குட்டை அருகே கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அனைவரும் குட்டையில் குளித்தனர். அப்போது விக்னேஷ்வரன் தண்ணீரில் மூழ்கினார். நண்பர்கள் தேடியும் அவரை மீட்க முடியவில்லை.

இது குறித்து மாங்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் இன்று காலை கல்குவாரி குட்டையில் தேடும் பணியில் ஈடுபட்டனர். மதியம் அவரது உடல் மீட்கப்பட்டது.

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இந்த கல்குவாரி குட்டையில் இருந்து சென்னை நகர மக்களின் குடிநீருக்காக தண்ணீர் எடுக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். எனவே கல்குவாரி குட்டைகளில் பொதுமக்கள் குளிக்க அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com