பள்ளிக்கரணை அருகே இளம்பெண் படுகொலை- ஏரியில் உடல் வீச்சு

பள்ளிக்கரணை அருகே கை, கால்களை கட்டி இளம்பெண் படுகொலை செய்ப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை
கொலை
Published on

வேளச்சேரி:

பள்ளிக்கரணை அருகே உள்ள பெரும்பாக்கம் ஏரியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் கிடந்தது.

இதுபற்றி பள்ளிக்கரணை போலீசுக்கு நேற்று இரவு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அழகு தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

நீளம் மற்றும் பிங்க் கலரில் முழுக்கை சட்டை அணிந்திருந்த அந்த பெண் பிங்க் கலரில் பேண்ட் அணிந்திருந்தார். தலை குப்புற உடல் கிடந்தது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மூக்குத்தி அணிந்திருந்த பெண்ணின் உடலில் வேறு அடையாளங்கள் எதுவும் காணப்படவில்லை. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண் அணிந்திருந்த உடை புதிதாக இருந்தது.

அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவரை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் அதே கயிற்றால் உடலையும் கட்டி பெரும்பாக்கம் ஏரியில் வீசியுள்ளனர். கொலை நடந்து 2 அல்லது 3 நாட்கள் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கொலையுண்ட பெண்ணுக்கு 30 வயதுக்குள்தான் இருக்கும். குடும்ப பிரச்சினை காரணமாகவோ, அல்லது காதல் விவகாரத்திலோ அவர் கொலை செய்பப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மூக்குத்தி மற்றும் உடை ஆகியவற்றை வைத்து கொலையுண்ட பெண் ஆந்திராவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

அதே நேரத்தில் பெரும்பாக்கம், பள்ளிக்கரணை பகுதியில் யாராவது காணாமல் போய் உள்ளனரா? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

இது தொடர்பாக சுற்று வட்டாரங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் மாயமான பெண்கள் பற்றிய பட்டியலையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

பெரும்பாக்கம் ஏரியை யொட்டியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இளம்பெண் யார்? என் பதை கண்டுபிடிப்பதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com