திருவள்ளூர் அருகே இளம்பெண் கடத்தலை தடுத்த வாலிபர் ஆட்டோ ஏற்றி கொலை

திருவள்ளூர் அருகே இளம்பெண் கடத்தலை தடுத்த வாலிபர் ஆட்டோ ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏக்கேஷ்
ஏக்கேஷ்
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் அருகே உள்ள மப்பேடு போலீஸ் நிலையம் அருகே கூட்டுச் சாலையில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நரசிங்கபுரம் செல்ல வேண்டும் என்று அவ்வழியே சென்ற ஆட்டோவில் ஏறி பயணம் செய்தார்.

அப்போது ஆட்டோ நரசிங்கபுரம் செல்லாமல் கொண்டஞ்சேரி பகுதியில் இருந்து கடம்பத்தூர் செல்லும் சாலையில் வேகமாக சென்றது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சலிட்டார். இதனை அவ்வழியே மோட்டார் சைக்கிளில் சென்ற கொண்டஞ்சேரி பகுதியை சேர்ந்த ஏக்கேஷ் (22) மற்றும் அவரது நண்பர்கள் எஸ்தர் பிரேம்குமார், வினித், பிராங்கிளின், சார்லி ஆகியோர் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் இளம்பெண்ணை கடத்தி சென்ற ஆட்டோவை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றனர்.

இதற்கிடையே ஆட்டோவில் இருந்த பெண் தப்பி கீழே குதித்தார். இதில் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இதற்குள் ஏக்கேசும், அவரது நண்பர்களும் சத்திரம் தரைப்பாலம் அருகே ஆட்டோவை வழிமறித்து நிறுத்த முயன்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர் ஏக்கேசும் அவரது நண்பர்களும் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்கள் மீது ஆட்டோவை மோதி தப்பி சென்றார். இதில் மோட்டார் சைக்கிளோடு ஏக்கேசும், அவரது நண்பர்களும் கீழே விழுந்தனர்.

இதில் பலத்த காயம அடைந்த ஏக்கேஷ் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலன் இன்றி ஏக்கேசை பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அவரது நண்பர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆட்டோவுடன் தப்பி சென்றவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com