

தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே மேட்டுக் கடையில் 5 வயது சிறுவன் தாக்கப்பட்டு சூடு வைக்கப்பட்ட சம்பவத்தில் குண்டடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுவனுக்கு சூடு வைத்த பெண் அவரது தாய் பானுப்பிரியா (வயது 30) என்றும், அவரது கள்ளக்காதலன் ராஜேஷ் என்றும் தெரியவந்தது.
பானுப்பிரியாவின் சொந்த ஊர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் ஆகும். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த அப்பாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சந்தோஷ் (9), மதுமிதா (8) மற்றும் இர்பான் (5) என ஆகிய குழந்தைகள் உள்ளனர். இந்த 3 குழந்தைகள் பிறந்த பின்னர் அப்பாஸ், பானுப்பிரியாவை விட்டு பிரிந்து சென்று வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இதனால் குழந்தைகளுடன் தனியாக தங்கியிருந்த பானுப்பிரியாவுக்கும், காரைக்கால் திருக்கானூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜேஷ் (24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடையில் கள்ளக்காதலாக மாறியது.
அதன்பின்னர் பானுப்பிரியா, தனது குழந்தைகள் மற்றும் கள்ளக்காதலன் ராஜேசுடன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் வந்து அங்கு ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். அப்போது சந்தோஷ் மற்றும் மதுமிதா ஆகிய 2 குழந்தைகளையும் சேவூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்து விட்டார். இர்பானை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்டார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் பானுப்பிரியா, தனது குழந்தை இர்பான் மற்றும் கள்ளக்காதலன் ராஜேசுடன் மேட்டுக்கடை வந்து வாடகை வீட்டில் குடியிருந்தார். இவர்கள் குடியிருக்கும் வாடகை வீடு ஒரு அறை மட்டும் கொண்டது என்பதால் அங்கு பானுப்பிரியாவும், அவருடைய கள்ளக்காதலனும் அடிக்கடி சந்தோஷமாக இருப்பதற்கு பெற்ற மகனே இடையூறாக இருப்பதாக பானுப்பிரியா கருதினார். இதையடுத்து மகன் என்றும் பாராமல் சிறுவன் இர்பானுக்கு சூடுவைத்தும், தோசைக்கல்லால் தாக்கியும் சித்ரவதை செய்துள்ளார்.
இதனால் சிறுவன் வலி தாங்க முடியாமல் அழுதுள்ளான். மேலும் பசியால் துடிக்கும் சிறுவனுக்கு சோறு கொடுக்காமல், வீட்டை விட்டு வெளியே தள்ளி, கதவை உள்பக்கமாக பூட்டிக்கொள்ளும் கல் நெஞ்சம் படைத்த பானுப்பிரியா, வீட்டினுள் கள்ளக்காதலுடன் உல்லாசத்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இர்பானை பானுப்பிரியா தாக்கியதால் வலி தாங்க முடியாத இர்பான் தனது தாயிடம் இருந்து தப்பி மேட்டுக்கடை பஸ் நிலையத்திற்கு வந்துள்ளான். அவனை போலீசார் மீட்டனர். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.. இதையடுத்து பானுப்பிரியாவையும், அவருடைய கள்ளக்காதலன் ராஜேசையும் போலீசார் கைது செய்தனர்.