அவனியாபுரத்தில் கழுத்தை நெரித்து இளம்பெண் கொலை

கழுத்தை நெரித்து இளம்பெண் கொலை செய்யப்பட்டார். கணவரை போலீசார் கைது செய்தனர்.
அவனியாபுரத்தில் கழுத்தை நெரித்து இளம்பெண் கொலை
Published on

மதுரை:

மதுரை அவனியாபுரம் குடிசை மாற்று குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 34). ஆட்டோ டிரைவரான இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சரவணனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கரகாட்ட கலைஞர் அர்ச்சனா தேவி (வயது 19) என்பவருக்கும் ஆட்டோ சவாரியின் போது பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இருவரும் நெருங்கி பழகவே திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மாத பெண் குழந்தை உள்ளது.

திருமணமான பின்பு அர்ச்சனா தேவி அடிக்கடி கரகாட்டம் ஆட சென்று வந்தார். இது சரவணனுக்கு பிடிக்கவில்லை.

மேலும் அர்ச்சனா தேவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவும் அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சரவணன், மனைவியை அரிவாளால் வெட்டியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தார். பின்னர் உடலை வீட்டின் கழிவறையில் பதுக்கி வைத்தார்.

இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்க வில்லை. இதனால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்தது.

தகவல் அறிந்த அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்றனர்.

வீட்டின் கதவை பல முறை தட்டியும் எந்த பலனும் இல்லை. இதையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது சரவணன் அங்கு அமர்ந்திருந்தார். கழிவறையில் அர்ச்சனா தேவியின் பிணம் கிடந்தது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சரவணனை கைது செய்தனர். இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com