விக்கிரவாண்டி அருகே இளம்பெண் கற்பழித்து கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்

இளம்பெண்ணை ஏமாற்றி ஓடை கரையில் கற்பழித்து கொன்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
விக்கிரவாண்டி அருகே இளம்பெண் கற்பழித்து கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்
Published on

விக்கிரவாண்டி:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரத்தூர் லட்சுமிபுரத்தில் ஓடை உள்ளது. இதன் அருகே இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடல் அரை நிர்வாண நிலையில் இருந்தது.

அந்த வழியாக சென்றவர்கள் பெண் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அவர்கள் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுப்பையா மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். ஓடை கரையில் கிடந்த பெண்ணின் பிணத்தை பார்வையிட்டனர்.

அந்த பெண்ணின் உடலில் காயங்கள் இருந்தது. பிணத்தின் அருகே மதுபாட்டில் கிடந்தது. மர்ம கும்பல் அவரை ஏமாற்றி அழைத்து வந்து மது குடித்து உல்லாசமாக இருந்து விட்டு பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட பணத்தகராறில் அந்த கும்பல் அந்த பெண்ணை அடித்து கொலை செய்து பிணத்தை ஓடை கரையில் வீசி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.

அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

விழுப்புரம், கடலூர், புதுவை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் யாராவது பெண் காணாமல் போயிருக்கிறார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இளம்பெண்ணை ஏமாற்றி அழைத்து வந்து கற்பழித்து கொன்ற மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையாளிகளை தேடிவருகிறார்கள்.

இளம்பெண் ஓடை கரையில் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com