திருப்பூரில் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை: நகை-பணம் கொள்ளை

திருப்பூரில் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை: நகை-பணம் கொள்ளை
Published on

திருப்பூர்:

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பூபாலன் (வயது 30). இவரது மனைவி நதியா (24). இவர்களுக்கு தர்சிகா (4) என்ற மகளும், சுதர்சன் (2) என்ற மகனும் உள்ளனர்.

பூபாலன் திருப்பூர் வீரபாண்டி இடுவம்பாளையத்தில் குடும்பத்துடன் தங்கி அருகில் உள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வருகிறார். நேற்று வழக்கம்போல் பூபாலன் வேலைக்கு சென்று விட்டார். நதியா மகன், மகளை பார்த்துக்கொண்டு வீட்டில் இருந்தார். இந்நிலையில் பூபாலனின் தம்பி ஜீவானந்தம் இரவு 8.45 மணிக்கு வந்தார்.

அப்போது சிறுவன் சுதர்சன் அழுதுகொண்டிருந்தான். சுதர்சனை தூக்கி சமாதானப் படுத்த முயன்றார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது நதியா தலைகுப்புற ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதிர்ச்சியடைந்த ஜீவானந்தம் அண்ணி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பது குறித்து அண்ணன் மற்றும் வீரபாண்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு கணவர் மற்றும் திருப்பூர் கமி‌ஷனர் நாகராஜன் தலைமையிலான போலீசார் வந்தனர். மனைவி ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து பூபாலன் கதறி அழுதார். போலீஸ் விசாரணையில் நதியா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை, செல்போன், பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் நேற்று இரவு 7 மணிக்கு நதியாவின் சித்தி மகள் ரேகா வீட்டிற்கு வந்துள்ளார். நதியாவிடம் சிறிது நேரம் அவர் பேசி விட்டு வீட்டில் இருந்த சிறுமி தர்சிகாவை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்றார்.

நதியா 2 வயது மகனுடன் இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் தான் நகை, பணத்துக்காக கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள். மேலும் குடியிருப்பு அதிகம் உள்ள இடத்தில் வீடு புகுந்து நதியாவை கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்த மர்ம நபர்கள் தெரிந்தவர்களாக இருக்க கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நதியாவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த துணிகர கொலை, கொள்ளை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com