

சீனாவில் மனித உரிமைகளுக்காக அரசாங்கத்தை எதிர்த்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருபவர் லியூ ஜியாவோபோ (வயது 61). இவரை 2009-ம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக கூறி சீன அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. அவருக்கு அடுத்த ஆண்டே உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
எனினும் அவர் நோபல் பரிசை பெறுவதற்காக நார்வே செல்ல சீனா அனுமதிக்கவில்லை. மாறாக நோபல் பரிசு தேர்வு குழுவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து நார்வே நாட்டின் உறவையும் துண்டித்துக் கொண்டது. மேலும், 2010-ல் அவருடைய மனைவி ஜியாவை வீட்டுக்காவலிலும் வைத்தது.
இந்தநிலையில் கடந்த 8 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த லியூ உடல் நலக்குறைவால் சென்யாங் நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் 23-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முற்றிய நிலையில் கல்லீரல் புற்றுநோய் தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது.