முதியவரை ஏமாற்றி ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஆடுகளை வாங்கி சென்ற மர்ம நபர்கள்

அன்னூர் அருகே ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து முதியவரை ஏமாற்றி சென்ற மர்மநபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
முதியவரை ஏமாற்றி ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஆடுகளை வாங்கி சென்ற மர்ம நபர்கள்
Published on

அன்னூர்:

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள செம்மாணி செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 75). இவர் ஏராளமான ஆடுகளை வளர்த்து வருகிறார்.

கடந்த 7-ந் தேதி ராமசாமி அப்பிச்சிமார் கோவில் அருகே ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு காரில் வந்த 2 பேர் தங்கள் நிறுவனத்தில் நடக்க உள்ள விருந்து நிகழ்ச்சிக்காக 2 ஆடுகள் தேவைப்படுகிறது என கேட்டனர். ராமசாமி 2 ஆடுகளுக்கு ரூ. 10 ஆயிரம் விலை பேசினார். அதனை ஏற்றுக்கொண்ட அந்த 2 பேர் 4 ரூ. 2 ஆயிரம் நோட்டுகள், 4 ரூ. 500 நோட்டுகள் ஆகியவற்றை கொடுத்து ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

பணத்தை பெற்றுக்கொண்ட ராமசாமி பணத்தை வீட்டில் பத்திரமாக வைத்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்ப செலவுக்காக தனது மகன் கோதண்டனிடம் அந்த பணத்தை கொடுத்தார். கோதண்டன் ரூபாய் நோட்டுகளை வாங்கி பார்த்த போது அனைத்தும் ஒரே வரிசை எண் கொண்டதாகவும், ஒரே ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்து ராமசாமியை அந்த மர்மநபர்கள் ஏமாற்றிச் சென்றதும் தெரிய வந்தது.

இது குறித்து கோதண்டன் அன்னூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஏமாற்றி சென்ற மர்மநபர்களைதேடி வருகிறார்கள்.

இதேபோல வாகராயன்பாளையம், கரிச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து மர்மநபர்கள் ஆடுகளை வாங்கிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com