

சென்னை:
சாகித்ய அகாடமி விருது சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும்.
பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பல்வேறு பிரிவுகளில் எழுத்தாளர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
அவ்வகையில் தமிழக மாநில அளவில் வழங்கப்படும் இவ்வாண்டிற்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் சோ.தர்மன் எழுதிய ‘சூல்’ நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் தர்மன். தர்மராஜன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் சோ.தர்மன் என்ற பெயரில் நாவல்கள் எழுதி வருகிறார். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்வியலை பதிவிடுவதில் முக்கிய பங்கு வகிக்கும் சோ.தர்மன் ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட 7 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
இது குறித்து தர்மன்,‘மத்திய அரசு எனது நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்க உள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நான் நடிகன் அல்ல, நான் ஒரு எழுத்தாளர். சூரியகாந்தியை போல் அல்லாமல் மூலிகையைப் போல் இருப்பேன்’ என கூறினார்
1992 மற்றும் 1994 ஆண்டுகளில் இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான விருதினைப் பெற்றிருக்கிறார் சோ.தர்மன். இவர் எழுதிய "கூகை" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது, என்பது குறிப்பிடத்தக்கது.