உலகக்கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

வங்காளதேச அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்றது.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஷாகின் அப்ரிதி
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஷாகின் அப்ரிதி
Published on

லண்டன்:

பாகிஸ்தான் - வங்காள தேசம் அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 400 ரன்களுக்கு மேல் அடித்தால் மட்டுமே, அரையிறுதிக்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற நெருக்கடியான சூழ்நிலையுடன் களம் இறங்கியது.

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பகர் ஜமான் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து இமாம் உல் ஹக் உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் ஆசம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் பாகிஸ்தான் 400 ரன்களை தாண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அணியின் ஸ்கோர் 180 ரன்னாக இருக்கும்போது பாபர் ஆசம் 96 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய இமாம் உல் ஹக் சதம் அடித்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த வீரர்கள் வங்காளதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 50 ஓவரில் 9 விக்கெட் இழந்து 315 ரன்கள் மட்டுமே அடித்தனர். 

வங்காளதேச அணி சார்பில் முஷ்டாபிஜூர் ரஹ்மான் ஐந்து விக்கெட்டுகளும், சாய்புதீன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேசம் அணியின் தொடக்க வீரர்கள் தமீம் இக்பால் 8 ரன்னிலும் சவுமியா சர்கார் 22 ரன்னிலும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். சற்று நிலைத்து நின்று ஆடிய ஷகிப் அல்-ஹசன் அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆனால் மற்றவீரர்கள் சரிவர விளையாடாததால் வங்காளதேச அணி 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 94 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. 

பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிதி அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் அரையிறுதி செல்லும் வாய்ப்பை பாகிஸ்தான் இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது       

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com