

கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் உள்ள சாபெல்லி அமெரிக்க விமான படைத்தளத்திற்கு அருகே அமெரிக்க விமானப் படையின் அதிநவீன டிரோன் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்க விமானப் படையின் 'MQ-9A ரீப்பர்' டிரோன் என்பது தெரியவந்துள்ளது.
சாபெல்லி விமான தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த டிரோன் கீழே விழுந்து நொறுங்கியதாக நம்பப்படுகிறது.
ரீப்பர் டிரோன் எதிரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாகதானாகவே நொறுங்கி விழுந்ததா என்பது குறித்து தகவல் இல்லை.
ஜிபூட்டி நகருக்கு தென்மேற்கே அமைந்துள்ள சாபெல்லி விமான ஏர் பேஸ், ஆப்பிரிக்க கண்டத்தில் அமெரிக்க ராணுவத்தின் மிக முக்கியமான மையமாகச் செயல்பட்டு வருகிறது.
தெற்கு செங்கடல் பகுதி உட்படப் பிராந்தியம் முழுவதும் உளவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா இந்த 'MQ-9 ரீப்பர்' டிரோன்களை சாபெல்லி தளத்தில் இருந்தே இயக்கி வருகிறது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் ஏமனுக்கும் ஜிபூட்டிக்கும் இடையே உள்ள பாப் எல் மண்டேப் ஜலசந்தி மற்றும் செங்கடல் பகுதியில் ஏற்கனவே பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ள சூழ்நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
கடந்த காலத்தில் அமெரிக்காவின் பல 'MQ-9 ரீப்பர்' டிரோன்களை ஹவுதிகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர் என்பதோடு, செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதனால், இந்த டிரோன் விபத்துக்கும் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.
இருப்பினும் இந்தச் சம்பவத்திற்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
பாப் எல் மண்டேப் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது இந்த டிரோனின் சிக்னல் மற்றும் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகச் ஆரம்பக்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ராணுவம் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. டிரோன் விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் பணிகள் நடந்து வருகின்றன.