

ஐந்து மாதங்களாக நீடிக்கும் ஈரான் தொடர்பான மோதலில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இத்தகைய அணுகுமுறையை கையாள்வது இது முதல் முறையல்ல; ஆனால் இம்முறை நிலைமை மாறுபட்டது என்று அவர் வலியுறுத்துகிறார்.
வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான புதிய பேச்சுவார்த்தைகள், ஈரான் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளவும், அந்நாட்டின் மீது அமெரிக்க தாக்குதல்கள் தீவிரமடைவதை தவிர்க்கவும் ஒரு "கடைசி வாய்ப்பு" என்று அதிபர் டிரம்ப் கூறினார்.
ஓவல் அலுவலகத்தில் பேசிய டிரம்ப், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த அமெரிக்காவின் கவலைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழியை உருவாக்குவது ஆகியவற்றில் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார். பேச்சுவார்த்தைகளின் நிலை குறித்த தகவல்கள் "இன்றோ அல்லது நாளையோ" தெரியவரும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"முதல் கட்டம் நீரிணையை திறப்பதாகும். இரண்டாவது கட்டம் அணு ஆயுத ஒழிப்பாக இருக்கும். அதற்கு சிறிது காலம் எடுக்கும்," என்று அதிபர் டிரம்ப் கூறினார்.
வளைகுடா நாடுகளான கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றின் வேண்டுகோளின் பேரில், ஈரானுக்கு எதிராக புதிய பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்த அமெரிக்க படைகளுக்கு உத்தரவிடுவதை தள்ளிவைக்க முடிவு செய்ததாக டிரம்ப் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று "இரண்டாம் உலக போருக்கு பிறகு மிகப்பெரிய தாக்குதலை" அமெரிக்கப் படைகள் நடத்துவதற்கான திட்டம் தயாராக இருந்ததாக அவர் கூறினார். ஆனால் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட முக்கிய வளைகுடா தலைவர்களின் கருத்துக்களை கேட்ட பிறகும், பெயரிடப்படாத ஈரான் அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரிலும், அந்த திட்டத்தை கைவிட்டு, இராஜதந்திர முயற்சிகளுக்கு அதிக நேரம் கொடுக்க முடிவு செய்ததாக தெரிவித்தார். இருப்பினும், ஈரான் மீதான தனது பொறுமை குறைந்து வருவதாக டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.
"ஈரான் அதை ஒப்புக்கொள்ள விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை தடுப்பது குறித்து நாங்கள் உண்மையில் பேசிக்கொண்டிருக்கிறோம்," என்று டிரம்ப் கூறினார்.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்கியதில் இருந்து, ஈரான் மீதான தாக்குதல்களை அதிகரிப்பதாக டிரம்ப் பலமுறை அச்சுறுத்தினார். பின்னர் தனது அச்சுறுத்தல்களில் இருந்து பின்வாங்கியுள்ளார்.
தெஹ்ரான் மீது மீண்டும் மீண்டும் கடுமையான அச்சுறுத்தல்களை விடுத்துப் பின்னர் பின்வாங்குவதை அமெரிக்கர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்று ஒரு செய்தியாளர் கேட்டதற்கு, ஈரானியர்களின் உயிர்கள் மீதான அக்கறையின் காரணமாகவே தான் பொறுமையை கடைப்பிடிப்பதாக டிரம்ப் பதிலளித்தார்.