கண்ணுக்குக் கண் பதிலடி: மத்திய கிழக்கில் புதிய பதற்றம்... சவுதி அரேபியாவிற்கு எதிராக கடல்வழி முற்றுகையை அமல்படுத்துவதாக ஹூதி அமைப்பு அறிவிப்பு!

ஹார்மூஸ்க்கு இணையாக இருந்த மற்றொரு வர்த்தகப் பாதையையும் மூடுவது உலகப் பொருளாதாரத்தின் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.
கண்ணுக்குக் கண் பதிலடி: மத்திய கிழக்கில் புதிய உச்சக்கட்ட பதற்றம்... சவுதி அரேபியாவிற்கு எதிராக கடல்வழி முற்றுகையை அமல்படுத்துவதாக ஹூதி அமைப்பு அறிவிப்பு!
Published on

ஈரானின் ஆதரவுப்பெற்ற ஏமனின் ஹூதி அமைப்பு, சவுதி அரேபியாவுக்கு எதிராக உடனடி கடற்படை முற்றுகையை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஏமன் மக்கள் அனைவரும் போருக்கு ஆயத்த நிலையில் இருக்குமாறும், ஆயுதமேந்தி போரிடத் தயாராகுமாறும் அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த வாரம் ஏமன் தலைநகர் சனாவில் உள்ள விமான நிலையத்தை சவூதி அரேபியா தாக்கியதாக ஹூதிகள் குற்றம் சாட்டினர். இதற்குப் பதிலடியாக, சவூதியின் அப்ஹா சர்வதேச விமான நிலையத்தின் மீது ஹூதிகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதன் தொடர்ச்சியாகவே இந்த கடல்வழி முற்றுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தங்களின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், செங்கடலை மறிக்குமாறு ஹூதிகளுக்கு ஈரான் அழைப்பு விடுத்திருந்தது.

ஏமனின் இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ வெளியிட்ட வீடியோவில், பல ஆண்டுகளாக ஏமன் மக்கள் மீது சவூதி விதித்துள்ள தடைகளுக்குப் பதிலடியாக, "கண்ணுக்குக் கண்" என்ற அடிப்படையில் இந்த முற்றுகை உடனடியாக அமலுக்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் தீவிரப் போர்ச் சூழலுக்கு மத்தியில், சவுதி அரேபியாவின் வணிகக் கப்பல்கள் மற்றும் துறைமுகங்களை இலக்கு வைத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ஹார்முஸ் வழியாக செல்லமுடியாத கப்பல்களுக்கு, பாப் அல்-மண்டேப் ஜலசந்தி ஒரு மாற்றுப் பாதையாக இருந்து வருகிறது.

செங்கடலின் தென்முனைக்குள் செல்லும் பாப் அல்-மண்டேப் ஜலசந்திக்கு அருகிலுள்ள ஏமன் பகுதியை ஹூதிகள் கட்டுப்படுத்துகின்றனர். இந்த ஜலசந்தியை மூடுவதால் உலகின் எண்ணெய் விநியோகம் 7 ​​சதவீதம் குறையும் என்றும், சவூதியின் பெரும்பாலான எண்ணெய் ஏற்றுமதிகள் மத்திய கிழக்கிலிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஹார்மூஸ்க்கு இணையாக இருந்த மற்றொரு வர்த்தகப் பாதையையும் மூடுவது உலகப் பொருளாதாரத்தின் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com