

பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழகத்தில் ஊழியர்களின் நிதிப் பிரச்சனை மற்றும் நிர்வாகச் சீர்கேட்டால் பல்கலைக்கழகம் ஒட்டுமொத்தமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சம்பளப் பாக்கிகளை உடனடியாக வழங்கக் கோரிப் பேராசிரியர்கள் நடத்தி வரும் செமஸ்டர் தேர்வுப் புறக்கணிப்புப் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசு மற்றும் சிந்து உயர் கல்வி ஆணையம் நடத்திய சமரச பேச்சுவார்த்தையைப் பேராசிரியர்கள் சங்கம் அதிரடியாக நிராகரித்துப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறது.
சிந்து உயர் கல்வி ஆணையம் ஜூன் 1 அன்று கூட்டிய அவசரக் கூட்டத்தில், பல்கலைக்கழக நிதிப் பிரச்சனைகளை ஆராய்ந்து 40 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க 6 பேர் கொண்ட சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த உத்தரவாதத்தை ஏற்று தேர்வுப் புறக்கணிப்பைக் கைவிட சங்கப் பிரதிநிதிகள் முதலில் ஒப்புக்கொண்டாலும், "40 நாட்கள் காத்திருக்க முடியாது, நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கினால் மட்டுமே தேர்வு நடக்கும்" என பேராசிரியர்களின் பொதுக்குழு கூட்டத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
மாலை நேர வகுப்புகள், தேர்வுப் பணிகள், வினாத்தாள் தயாரித்தல் மற்றும் விடுப்புப் பயன்கள் போன்றவற்றுக்கான ஊதியம் பல மாதங்களாக வழங்கப்படாததால் கராச்சி பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தவித்து வருகின்றனர்.
இந்த மோசமான நிதி நெருக்கடிக்குத் தற்போதைய நிர்வாகமும் துணைவேந்தரும் தான் காரணம் எனத் தங்களின் குற்றச்சாட்டை முன்வைக்கும் பேராசிரியர்கள், துணைவேந்தர் பங்கேற்கும் எந்தவொரு சமரச பேச்சுவார்த்தையிலும் தங்களுக்கு உடன்பாடில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
பேராசிரியர்கள் சங்கம் தனது தேர்வுப் புறக்கணிப்புப் போராட்டத்தை வாபஸ் பெற மறுத்துள்ளதால், பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் காலவரம்பின்றி ஒத்திவைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
பல்கலைக்கழக நிர்வாகம் தங்களுக்கு இடையே ஒரு 'அவநம்பிக்கை' சூழலை உருவாக்கிவிட்டதாகக் கராச்சி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத் தலைவர் டாக்டர் சையத் குஃப்ரான் ஆலம் தெரிவித்துள்ளார்.