

அமெரிக்கா மறறும் ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஏமனின் ஹவுதி அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய துறைமுக நகரமான ஹுதெய்தா மீது சவுதி அரேபியா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
நள்ளிரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு சவுதி அரேபியா கடுமையான விலையைக் கொடுக்க வேண்டி வரும் என்றும், இதற்கு உரிய முறையில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஹவுதிகள் எச்சரித்துள்ளனர்.
ஹுதெய்தாவில் உள்ள தொலைத்தொடர்பு ஆணையத்திற்குச் சொந்தமான மையங்களைக் குறிவைத்து நேற்று நள்ளிரவு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஹுதெய்தா துறைமுகப் பகுதியில் பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
கடலோர நகரமான ஹுதெய்தா, ஹவுதிக்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு ஏமன் பகுதிகளுக்கு மிக முக்கியமான இணைப்பு பாதையாக திகழ்கிறது.
ஏமனுக்கு இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான வணிகப் பொருட்கள் மற்றும் சர்வதேச மனிதநேய உதவிகள் அனைத்தும் இந்தத் துறைமுகத்தின் வழியாகவே விநியோகிக்கப்படுகின்றன.
சவுதி அரம்கோ தாக்குதல்
பதிலடியாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்களான ஜிசான் மற்றும் யான்பு ஆகியவற்றில் அமைந்துள்ள சவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் தளங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தாக்குதலைத் தொடர்ந்து சவூதியின் ஜிசான் மற்றும் யான்பு நகரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு இடங்களுக்குச் செல்லுமாறு சவுதி சிவில் பாதுகாப்புத் துறை அவசர எச்சரிக்கை விடுத்தது.
மேலும் செங்கடலில் பயணித்த சவுதிக்குச் சொந்தமான கப்பல் மீது ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் அதன் வெளிப்பகுதியில் லேசான சேதம் ஏற்பட்டது. இருப்பினும் மாலுமிகள் பாதுகாப்பாக இலக்கை அடைந்தனர்.
"ஹுதெய்தாவைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதன் மூலம் சவுதி அரசு இந்த மோதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
இனி வரும் நாட்களில் தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதே எங்கள் முதன்மை நடவடிக்கையாக இருக்கும்" என்று ஹவுதி வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.