ரஷியா-உக்ரைன் போர்: இழப்பீடு வழங்க இலங்கை அரசு அழைப்பு

2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. உரிய இழப்பீடு வழங்க ரஷியாவுக்கு இலங்கை அரசு அழைப்பு.
ரஷியா-உக்ரைன் போர்: இழப்பீடு வழங்க இலங்கை அரசு அழைப்பு
Published on

மாஸ்கோ:

ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர்.

இதனால் அவ்விரு நாடுகளும் வெளிநாடுகளில் இருந்து தங்கள் ராணுவத்துக்கு ஆட்களை சேர்த்து வருகிறது. குறிப்பாக ரஷியா, அதிக சம்பளம், பாதுகாப்பு உதவியாளர் பணி என பொய்யான வாக்குறுதிகளை அளித்து ராணுவத்தில் ஆட்களை சேர்த்து வருகிறது.

அப்படி சேர்க்கப்படும் நபர்களுக்கு வலுக்கட்டாயமாக போர்ப்பயிற்சி அளித்து அவர்களின் விருப்பத்திற்கு எதிராக போர் முனைக்கு அனுப்பப்படுகின்றனர்.

அப்படி கட்டாயமாக போரில் ஈடுபடுத்தப்படும் நபர்கள் உக்ரைன் நடத்தும் தாக்குதல்களில் பலியாவது தொடர் கதையாக உள்ளது.

இந்த நிலையில் ரஷியா-உக்ரைன் போரில் இலங்கையை சேர்ந்த 17 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க ரஷியாவுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அண்மையில் ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை வெளியுறவுத்துறை இணை மந்திரி தாரக பாலசூரியா தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷிய அதிகாரிகளிடம் இதை பிரச்சினையாக எழுப்பியதாக இலங்கையில் உள்ள ரஷிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `ரஷியா-உக்ரைன் போரில் இலங்கையை சேர்ந்த 17 பேர் பலியானதை சுட்டிக்காட்டி அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் போரில் காயமடைந்த இலங்கையை சேர்ந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்தல், போர் முனையில் சிக்கி இருக்கும் இலங்கையை சேர்ந்தவர்களை மீட்டு பத்திரமாக தாயகம் அனுப்பி வைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளும் இலங்கை அரசின் சார்பில் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com