

இரவு முழுவதும் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் கீவ் மீது ரஷியா கடுமையான தாக்குதல் நடத்தியது.
இத்தாக்குதலால் அரசு அலுவலகங்கள், குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகிலுள்ள பகுதிகள் உட்பட நகர மையம் முழுவதும் உள்ள கட்டிடங்கள் அதிர்ந்தன. மேலும் குறைந்தது 10 பேர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதல்களால் நகரம் முழுவதும் புகை சூழ்ந்த நிலையில், இரவு முழுவதும் எச்சரிக்கை ஒலிப்பான்கள் ஒலித்தன. நகர மையத்திற்கு அருகிலும், அரசு கட்டிடங்களுக்கு அருகிலும் சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள் எழுந்தன.
தலைநகர் உள்பட ஒன்பது மாவட்டங்களில் சேதம் பதிவாகியுள்ளது என்று கீவ் ராணுவ நிர்வாகத் தலைவர் டைமூர் தகாசென்கோ தெரிவித்தார்.
முன்னதாக ரஷியா அதிவேக ஒரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரித்தார்.
உக்ரைனின் விமானப்படையும் ஒரேஷ்னிக் ஏவுகணை மூலம் ரஷியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக எச்சரித்திருந்தது.
இருப்பினும் இரவு நேரத் தாக்குதலில் இந்த ஏவுகணை பயன்படுத்தப்பட்டதா? என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.