

சீனா தனது 'செயற்கை சூரியன்' திட்டத்திற்காக 582 மெட்ரிக் டன் எடை கொண்ட உலகின் மிகப்பெரிய சூப்பர் கண்டக்டிங் காந்தத்தை வெற்றிகரமாக சோதித்துள்ளது.
அணுக்கரு இணைவு மூலம் தூய்மையான, கிட்டத்தட்ட வரம்பற்ற ஆற்றலை உற்பத்தி செய்வதற்குத் தேவையான ஒரு முக்கிய அங்கமான, உலகின் மிகப்பெரிய மீக்கடத்தும் அணுக்கரு இணைவு காந்தத்தை உருவாக்கிச் சோதித்ததன் மூலம், செயற்கை சூரியனை உருவாக்கும் திட்டத்தில் ஒரு பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
சீன அறிவியல் அகாடமியின் கீழ் உள்ள பிளாஸ்மா இயற்பியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த டி வடிவிலான காந்தம், 21 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும், 582 டன் எடையும் உலகின் மிகப்பெரிய காந்தமாகும். இது இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய அணுக்கரு இணைவு உலை மீக்கடத்தி காந்தமாகும்.
அணுக்கரு இணைவு உலைக்குள் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வரை வெப்பமடையும் பிளாஸ்மாவை, உலை சுவர்களில் தொடாதவாறு காந்த விசை மூலம் காற்றில் மிதக்க வைக்க இது பயன்படுகிறது.
பிரான்சில் உள்ள சர்வதேச ITER திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட காந்தங்களை விட இது 1.3 மடங்கு பெரியது மற்றும் 3 மடங்கு அதிக ஆற்றலைச் சேமிக்கக்கூடியது.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக எஃகு, இன்சுலேடிங் பொருட்கள் மற்றும் கம்பிகள் என அனைத்தும் சீனாவிலேயே முழுமையாக தயாரிக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவை முதன்மை ஆற்றல் மூலங்களாக இருந்தாலும், இதற்கு மாற்றான, தூய்மையான ஆற்றல் மூலங்களைக் கண்டறிய விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
தற்போது உலகம் பயன்படுத்தும் நிலக்கரி, பெட்ரோல் போன்ற எரிபொருட்கள் சில தசாப்தங்களில் தீர்ந்துவிடும். ஆனால், இந்த அணுக்கரு இணைவு தொழில்நுட்பத்திற்குத் தேவையான டியூட்டிரியம் மற்றும் ட்ரிட்டியம் ஆகிய மூலப்பொருட்களைக் கடல் நீரிலிருந்தே மிக எளிதாகப் பிரித்தெடுக்க முடியும்.
அணுக்கரு இணைவு, நமது சூரியனின் இயற்பியலைப் பின்பற்றி, பெருமளவு ஆற்றலை மின்சாரமாக உருவாக்குகிறது. இணைவு செயல்முறையானது எந்தவொரு கதிரியக்கக் கழிவுகளையும் விட்டுச் செல்வதில்லை, மேலும் இது அணுக்கருப் பிளவை விடவும் பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.
ஒரு லிட்டர் கடல்நீரில், 300 லிட்டர் பெட்ரோலை எரிப்பதற்குச் சமமான அணுக்கரு இணைவு ஆற்றலை உற்பத்தி செய்யப் போதுமான டியூட்டீரியம் உள்ளது.
சீனாதான் தற்போது உலகில் மிக அதிகமாகக் கார்பன் உமிழ்வை ஏற்படுத்தும் நாடாக உள்ளது. 2060 ஆம் ஆண்டிற்குள் கார்பன் உமிழ்வே இல்லாத நாடாக மாற சீனா இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த செயற்கை சூரியன் எந்தவொரு பசுமை இல்ல வாயுக்களையும் வெளியிடாது என்பதால், இது புவி வெப்பமயமாதலைத் தடுக்கும்.
எதிர்காலத்தில் உலகை ஆளப்போவது எரிசக்தி தான். இந்த தொழில்நுட்பத்தை முதன்முதலில் வணிகரீதியாகக் கொண்டுவரும் நாடு, உலகின் ஒட்டுமொத்த ஆற்றல் சந்தையையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும். மேற்குறிப்பிட்டவற்றை தாண்டி, இந்த ஒரு காரணத்தை முக்கியமாக கொண்டே சீனா இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது.