ரஷ்யா இந்தியாவை நம்பகமான கூட்டாளியாக கருதுகிறது - அதிபர் புதின்

இந்தியாவுடன் தனது பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதில் ரஷ்யா உறுதியாக உள்ளது.
விளாடிமிர் புதின்
Published on

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்தியாவுடனான மாஸ்கோவின் மூலோபாய கூட்டாண்மையை பாராட்டியதோடு, ரஷ்யா உடனான தனது ஒத்துழைப்பை குறைக்குமாறு இந்தியாவை நிர்ப்பந்திக்கும் மேற்கத்திய நாடுகளின் முயற்சிகள் பயனற்றவை என்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு சேதம் விளைவிப்பவை என்றும் திட்டவட்டமாக கூறினார்.

பி.டி.ஐ. உள்ளிட்ட முன்னணி உலகளாவிய செய்தி நிறுவனங்களின் தலைவர்களுடனான கலந்துரையாடலில், புதின் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் அதன் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையையும் பாராட்டினார். மேலும், இந்தியாவுடன் தனது பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதில் ரஷ்யா உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்தியா உலகின் முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாக திகழ்வதோடு, தற்போது ஈர்க்கக்கூடிய பொருளாதார வளர்ச்சி விகிதத்தையும் வெளிப்படுத்தி வருகிறது," என்று குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் வரும் ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற மைல்கல்லை எட்டும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

"உலகின் முன்னணி பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியா, மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தை காட்டியுள்ளது. இது திடீரென நிகழ்ந்த ஒன்றல்ல. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்திய அரசு செய்துவரும் கடின உழைப்பின் விளைவே இது," என்று அதிபர் புதின் கூறினார்.

மேலும், "பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியா மீது அழுத்தம் கொடுப்பது சர்வதேச உறவுகளுக்கு பாதகமானது என்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். ரஷ்யா இந்தியாவை ஒரு "நம்பகமான கூட்டாளியாக" கருதுகிறது. வேறு எந்த நாட்டுடனும் இந்தியாவின் இருதரப்பு உறவுகளால் எந்தவிதமான எதிர்மறையான விளைவுகளையும் காணப்போவதில்லை. இந்தியா ஒரு சிறந்த ஜனநாயக நாடு, ரஷ்யா அதனுடனான தனது உறவுகளை தொடர்ந்து விரிவுபடுத்தும்," என்று அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com