தாய்லாந்தில் குறைந்த விலை டூர் பேக்கேஜ் - ஆசை காட்டி 3 இந்தியர்கள் கடத்தல்!

போலீசார் வீட்டிற்குள் நுழைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, கடத்தல்காரர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.
ThailandKidnapping
Published on

தாய்லாந்திற்குச் சுற்றுலா சென்ற மூன்று இந்திய இளைஞர்களைக் கடத்தி, ஒரு வாரத்திற்கும் மேலாக அறையில் பூட்டி வைத்து, கொடூரமான முறையில் சித்திரவதை செய்த சர்வதேசக் கடத்தல் கும்பலிடமிருந்து தாய்லாந்து போலீசார் அவர்களைப் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 5 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டூர் பேக்கேஜ் ஆசை காட்டி வலைவீச்சு

பாதிக்கப்பட்ட 23 முதல் 26 வயதிற்குட்பட்ட 3 இந்திய இளைஞர்களுக்கு 7 நாட்கள் தங்கிப் பார்க்கும் மலிவான சுற்றுலா பேக்கேஜ் என ஆசை காட்டி ஒரு கும்பல் தாய்லாந்திற்கு வரவழைத்தனர். இதற்காக அந்த இளைஞர்கள் சுமார் 2 லட்சம் செலுத்தியுள்ளனர்.

ஜூலை 21 அன்று பாங்காங்கின் சுவர்ணபூமி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவர்கள், அங்கிருந்து டாக்ஸி மூலம் பட்டாயாவில் உள்ள சுகும்வித் நெடுஞ்சாலையில் இருக்கும் ஒரு துரித உணவகத்திற்கு வந்துள்ளனர்.

அங்கிருந்த இந்தியர் ஒருவர், அவர்களைத் தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, பட்டயாவின் பாங் லாமுங் பகுதியில் உள்ள ஒரு சிறிய வாடகை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்களை 4 பாகிஸ்தானியர்களும் மற்றொரு இந்தியரும் சேர்ந்து மடக்கி சிறைபிடித்துள்ளனர்.

கொடூர சித்திரவதை

கடந்த திங்கட்கிழமை அன்று பட்டாயா போலீசார் அந்த வாடகை வீட்டை அதிரடியாகச் சோதனை செய்தபோது, இரண்டு படுக்கையறைகளில் கைகள், கால்கள் மற்றும் வாய்கள் கட்டப்பட்ட நிலையில் 3 இளைஞர்கள் அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர்.

கடந்த ஒரு வார காலமாக அவர்கள் தினமும் கொடூரமான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களைத் தலைகீழாகத் தொங்கவிட்டு, கணுக்கால்களில் கடினமான பொருட்களால் அடித்துள்ளனர்.

அவர்களின் கால்களில் கடுமையான காயம் மற்றும் வீக்கங்கள் இருந்ததை போலீசார் உறுதி செய்துள்ளனர். அவர்களுக்கு உணவோ, தண்ணீரோ அல்லது கழிவறை பயன்படுத்தும் அனுமதியோ வழங்கப்படவில்லை.

கடத்தல்காரர்கள் ஒரு இளைஞரின் உடல் முழுவதும் சிவப்பு பெயிண்ட்டை ஊற்றி, கடுமையான ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது போல வீடியோ கால் மூலம் இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்குக் காட்டி மிரட்டியுள்ளனர்.

இதன் மூலம் ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.70 லட்சம் பணத்தொகை கேட்டுள்ளனர்.

துபாயில் இருந்து இயங்கிய சர்வதேச நெட்வொர்க்

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்தியாவில் இருந்து தாய்லாந்து போலீசாரை உதவிக்கு அழைத்ததைத் தொடர்ந்து இந்த மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது.

கடத்தல்காரர்கள் தங்களின் இருப்பிடத்தை மறைப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் மொபைல் எண்ணைப் பயன்படுத்தியுள்ளனர்.

இருப்பினும், தாய்லாந்து குடியேற்றத் துறை போலீசார் துல்லியமாகச் செயல்பட்டு அவர்களது இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர்.

போலீசார் வீட்டிற்குள் நுழைவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, கடத்தல்காரர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர். எனினும், நேற்று பாங்காக்கின் க்ளோங் டான் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து, தாய்லாந்தை விட்டு விமானம் மூலம் தப்ப முயன்ற அவதார் சிங், ஜக்ஜித் சிங், ராம்பாலக் குமார், சுக்பிர் சிங் மற்றும் குல்ரா சிங் என்ற 5 இந்தியர்களைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

பணம் பறிக்கத் திட்டம்

கைது செய்யப்பட்ட இந்தியர்களிடம் நடத்திய விசாரணையில், ஒரு மாதத்திற்கு முன்பு சாட்டிங் ஆப் மூலம் அறிமுகமான ஒரு பாகிஸ்தான் நபர் கொடுத்த கட்டளையின் பெயரிலேயே தாங்கள் இவர்களைத் கடத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் கடத்தல்காரர் துபாயில் இருந்து கொண்டு, கிரிப்டோகரன்சி மூலம் பணத்தொகையைப் பெறத் திட்டமிட்டுள்ளார்.

இந்த கடத்தலுக்கு ஈட்டுத்தொகையாக இந்தியர்களுக்குப் பணம், நகைகள் மற்றும் தாய்லாந்தில் இருந்து தப்பிப்பதற்கான விமான டிக்கெட்டுகள் தருவதாக அந்த பாகிஸ்தான் நபர் உறுதியளித்துள்ளார்.

போலீசாரின் எச்சரிக்கை

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்குத் தாய்லாந்து அரசு விசா இல்லாத நுழைவு அனுமதியை சமீபத்தில் மீண்டும் வழங்கிய சில நாட்களிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது போன்ற சர்வதேசக் குற்றக் கும்பல்கள் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைப் பிடிக்க 'மலிவான டூர் பேக்கேஜ்' என்ற புதிய உத்தியைக் கையாளுவதால், சுற்றுலாப் பயணிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் தப்பியோடிய பாகிஸ்தான் குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com