பாகிஸ்தான்: காவல் நிலையம் அருகே அமைதி பேரணியில் தற்கொலைப் படை தாக்குதல் - 14 பேர் பலி

அந்த நபர் உடலில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.
பாகிஸ்தான் தற்கொலைப் படை தாக்குதல்
பாகிஸ்தான் தற்கொலைப் படை தாக்குதல்
Published on

பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் மாவட்டத்தில் கபல் சவுக் பகுதியில் பயங்கரவாதத்திற்கு எதிராக ஸ்வாட் ஆமன் ஜிர்கா என்ற அமைப்பின் தலைமையில் உள்ளூர் மக்களின் அமைதிப் பேரணி இன்று நடைபெற்றது.

பேரணியில் பேச்சாளர் உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில், அருகில் உள்ள கபல் காவல் நிலையத்தின் நுழைவாயில் வழியே நுழைய முயன்ற நபரை சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் தடுத்து நிறுத்திச் சோதனை செய்ய முயன்றனர்.

அப்போது, அந்த நபர் உடலில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.

உயிரிழப்புகள்

தொடக்கத்தில் 4 காவலர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக ஸ்வாட் மாவட்ட காவல் செய்தித் தொடர்பாளர் நாசிர் இக்பால் கரிமி தெரிவித்துள்ளார்.

காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணை

சம்பவம் நடந்த இடம் முழுவதையும் பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

அமைதியை வலியுறுத்தி திரண்ட மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் பதற்றம்

2021இல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, TTP என அழைக்கப்படும் தெஹ்ரிக் இ பாகிஸ்தான் அமைப்பு கைபர் பக்துன்க்வாவில் வலுவடைந்துள்ளது.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் சமீபகாலமாக பயங்கரவாதத் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.

TTP பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதிகளில் இருந்துகொண்டு அங்கிருந்து திட்டம் தீட்டி கைபர் பக்துன்க்வாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டுகிறது.

இதனால் இரு நாடுகள் இடையே ராணுவ மோதல் அவ்வப்போது வெடித்து அடங்குகிறது.

கைபர் பக்துன்க்வா பகுதியில் தொடர்ந்து நடைபெறும் துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டு தாக்குதல்கள் உள்ளூர் மக்களை கடுமையாக பாதித்துள்ளது. பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com