

சீனாவின் தெற்கு கடலோரப் பகுதியை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வரும் 'நவுல்' (Typhoon Noul) புயல் காரணமாக, நாட்டின் தேசிய வானிலை மையம் மிக உயர்ந்த அபாய எச்சரிக்கையான 'சிவப்பு எச்சரிக்கையை' விடுத்துள்ளது. நடப்பு ஆண்டின் 12-வது புயலான இது, குவாங்டாங் மாகாணத்தின் கடலோரப் பகுதியில் தீவிரமாகத் தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சீன தேசிய வானிலை மையத்தின் (NMC) தகவல்படி, புயலின் மையம் குவாங்டாங் மாகாணத்தின் ஹுய்ஜோ நகருக்கு உட்பட்ட ஹுய்ஜோங் பகுதிக்கு தென்கிழக்கே சுமார் 100 கி.மீ தொலைவில் கடலில் மையம் கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையை நோக்கி மணிக்கு 20 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
புயல் மையத்திற்கு அருகே சுழன்றடிக்கும் காற்றின் வேகம் 'ஃபோர்ஸ் 14' (Force 14-சுமார் மணிக்கு 150 கி.மீ-க்கும் மேல்) என்ற அளவில் மிகத் தீவிரமாக உள்ளது. கரையை நெருங்க நெருங்க இதன் வீரியம் மேலும் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
புயல் நெருங்குவதை அடுத்து, ஹாங்காங் அரசு உடனடியாக அவசரகால நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கையாக 410-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட அதிவேக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உள்துறை நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்காக 28 அவசரகால நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
சீனாவின் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் வறட்சி நிவாரண தலைமையகம், குவாங்டாங் மாகாணத்திற்கான அவசரகாலப் பாதுகாப்பு நிலையை 'லெவல் III' ஆக உயர்த்தியுள்ளது. மேலும், அருகில் உள்ள ஜியாங்சி மற்றும் ஹுனான் மாகாணங்களுக்கு 'லெவல் IV' வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவுல் புயல் குவாங்டாங் கடலோரப் பகுதியில் கரையைக்கடந்த பிறகு, வடமேற்கு மற்றும் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதன் தாக்கத்தால் ஃபூஜியான், ஜியாங்சி, ஹெனான், ஹுபெய், ஹுனான், குவாங்டாங் மற்றும் குவாங்சி ஆகிய தென் மற்றும் மத்திய சீன மாகாணங்களில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.