நானும் பிரதமர் மோடியும் தான் இன்ஸ்டாவில் பிரபலமான ஜோடி - இத்தாலி பிரதமர் மெலோனி கலகலப்பு!

இன்ஸ்டாகிராம் பிரபலம் குறித்து பிரதமர் மோடியின் பேச்சுக்கு G7 மாநாட்டில் இத்தாலி பிரதமர் கொடுத்த கலகலப்பான பதில்.
Narendira Modi, Giorhia Meloni
Published on

பிரான்ஸ் நாட்டின் எவியான்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் உலகளாவிய சவால்கள் மற்றும் உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிக்க G7 உச்சி மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உட்பட பல உலகத் தலைவர்கள் பங்கேற்றனர்.

இம்மாநாட்டின் குழு புகைப்படத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கும் இடையே நடந்த சுவாரசியமான உரையாடல் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

'மெலோடி' இணைய ட்ரெண்ட்...!

புகைப்படம் எடுப்பதற்கு முன்பாக இரு தலைவர்களும் பரஸ்பரம் கைகுலுக்கி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். அப்போது, சமூக ஊடகங்களில் தங்களுக்கு இருக்கும் பிரபலம் குறித்து பிரதமர் மோடி மெலோனியிடம் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.

அதற்கு பதிலளித்த இத்தாலி பிரதமர் மெலோனி சிரித்தபடியே, "ஆமாம், நாம் தான் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான ஜோடி!" என்று கூறினார்.

இவர்களின் பெயர்களை இணைத்து இணையவாசிகளால் உருவாக்கப்பட்ட 'Melodi' என்ற ஹேஷ்டேக் மீண்டும் உலகளவில் ட்ரெண்டாகத் தொடங்கியுள்ளது.

மெலடி மிட்டாய் பரிசு..

கடந்த மே மாதம் பிரதமர் மோடி ரோம் நகருக்குச் சென்றிருந்தபோது, மெலோனிக்கு இந்தியாவின் புகழ்பெற்ற 'பார்லே மெலோடி' மிட்டாய் பாக்கெட்டை பரிசாக வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, மெலோனி தனது சமூக ஊடகப் பக்கத்தில், "பிரதமர் மோடி மிகவும் சுவையான மிட்டாயைப் பரிசாகக் கொண்டு வந்துள்ளார்" என்று ஒரு நெகிழ்ச்சியான வீடியோவையும் பதிவிட்டிருந்தார்.

அப்போது, மெலோனி பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்து, "#Melodi குழுவிடம் இருந்து வணக்கம்" எனப் பதிவிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

இருதரப்பு உறவு மற்றும் வர்த்தகம்..

மேலும் இவர்களின் நட்பு வெறும் சமூக ஊடகக் கொண்டாட்டம் மட்டுமல்ல, இரு நாடுகளின் வெளியுறவுக் கொள்கையிலும் முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் முக்கிய பங்களிப்பாக இத்தாலி உருவெடுத்துள்ளது.

தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 16.77 பில்லியன் டாலரைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com