லஷ்கர் இ தொய்பா முக்கிய தளபதி உணவகத்தில் சாப்பிட்ட பின் மயங்கி விழுந்து மர்ம மரணம்

ஜம்மு காஷ்மீரில் கொல்லப்படும் பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்கு நிதி மற்றும் இதர உதவிகளை வழங்கும் பிரிவை இவனே நிர்வகித்து வந்தான்.
அப்துல் அஜிஸ்
அப்துல் அஜிஸ்
Published on

பாகிஸ்தானில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி காரி சயீத் அப்துல் அஜிஸ் மர்ம மரணம் அடைந்துள்ளான்.

அப்துல் அஜிஸ், நேற்று, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள குபா மசூதிக்கு தொழுகைக்காகச் செல்லும் வழியில், உணவகம் ஒன்றில் உணவு அருந்தியுள்ளான்.

மசூதியின் நுழைவாயிலை அடைந்த சில நிமிடங்களிலேயே அவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தான்.

அவனது மரணத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

லஷ்கர் தளபதி

கொல்லப்பட்ட காரி சயீத் அப்துல் அஜிஸ், லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கியமான பிரிவுக்குத் தலைமையாக செயல்பட்டு வந்தார்:

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடக்கும் துப்பாக்கிச்சூடு மற்றும் மோதல்களில் கொல்லப்படும் பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்கு நிதி மற்றும் இதர உதவிகளை வழங்கும் பிரிவை இவனே நிர்வகித்து வந்தான்.

தொடரும் மர்ம மரணங்கள்

இந்தச் சம்பவம் நடப்பதற்குச் சில நாட்களுக்கு முன்புதான், லஷ்கர் அமைப்பின் முக்கியச் செயல்பாட்டாளரான ரிஸ்வான் ஹனிப் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தான்.

அதில் அவன், கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்களால் தங்களது அமைப்பைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட முக்கிய உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பேசியிருந்தான்.

பெஷாவர், கராச்சி, ராவல்பிண்டி, ராவலாகோட் மற்றும் முசாபராபாத் ஆகிய நகரங்களில் இந்தத் தொடர் படுகொலைகள் நடந்துள்ளன.

இந்த ரிஸ்வான் ஹனிப் 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையவன். அவனே பாகிஸ்தானுக்குள் தங்களது உறுப்பினர்கள் தெரியாத நபர்களால் வேட்டையாடப்படுவதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளான்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com