

லெபனானை அத்துமீறி தாக்கிய இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் மீது நேற்று அதிகாலை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதனால் ஈரானுடன் அமெரிக்கா நடத்தி வந்த அமைதிப் பேச்சுவார்த்தை சீர்குலையும் சூழல் எழுந்துள்ளது.
முன்னதாக ஈரானை தாக்க வேண்டாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் போனில் தெரிவித்தும் அதை மீறி இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு செயல்பட்டார் என்ற தகவல் வெளியானது.
இதனிடையே நேற்று எழுந்த பதற்றத்தை அடுத்து, நிலைமையை சீர் செய்யும் விதமாக இஸ்ரேல் மீது இனி தாக்குதல் கிடையாது என ஈரான் அறிவித்தது.
இதனால் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் வாய்ப்பு அமெரிக்காவுக்கு கிடைத்துள்ள சூழலில் இஸ்ரேலுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதாவது இஸ்ரேல் மீண்டும் ஈரான் மீது ராணுவத் தாக்குதல்களை நடத்தினால், சர்வதேச சமூகத்தில் இஸ்ரேல் முற்றிலும் தனிமைப்படுத்தப்படும் என்று நேதன்யாகுவை தொலைபேசியில் அழைத்து டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து நேர்காணலில் பேசிய அதிபர் டிரம்ப், "நான் நேதன்யாகுவை நேரடியாகத் தொலைபேசியில் அழைத்து, உடனடியாகத் தாக்குதல்களை நிறுத்தும்படி கூறினேன்.
'பீபி (நேதன்யாகுவின் பட்டப்பெயர்) நீங்கள் இனிமேல் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
இல்லையெனில், மிக விரைவில் நீங்கள் உலக நாடுகளிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்படுவீர்கள்' என்று நான் அவரிடம் தீர்க்கமாகக் கூறிவிட்டேன்." என தெரிவித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவது தங்களுக்கு அச்சறுத்தல் என இஸ்ரேலும் அமெரிக்காவும் கடந்த பிப்ரவரியில் கூட்டாக ஈரானை தாக்கினர்.
ஈரான் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கியது.
மேலும் உலகின் 20சதவீத எண்ணெய் தேவைக்கான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது.
இதனால் சர்வதேச நாடுகள் எண்ணெய், எரிபொருள் நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதனால் போரை விரைந்து நிறுத்த வேண்டும் என்ற அழுத்தம் டிரம்ப் மீது விழுந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 8 தாற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டபோதும் நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவாத்தை இழுபறியுடன் நீடித்து வருகிறது.