

கடந்த இரண்டு நாட்களாக ஈரான்மீது அமெரிக்கா எந்தத் தாக்குதலையும் தொடுக்காதநிலையில், அதன்மீதான பதில் தாக்குதலையும் நிறுத்தவதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்கா தாக்குதலை நிறுத்தி வைத்திருக்கும் வரையே ஈரானின் இந்த அமைதி என்றும், அதேசமயம் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது குறித்து நம்பிக்கையை விட சந்தேகமே அதிகமாக உள்ளது எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த மாதம் ஏற்பட்ட இடைக்கால அமைதி ஒப்பந்தம் மீறபட்டு இரண்டு நாடுகளும் மாறி மாறி கடந்த 13 நாட்களாக தாக்குதல்களை தொடுத்து வந்தநிலையில், இந்த வார இறுதியில் ஈரான்மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தியிருந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
போரை தீவிரப்படுத்த ட்ரம்ப் பரிசீலித்து வந்ததாகவும், துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் கூட்டுப் படைத் தலைமைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் ஆகியோர் இதுகுறித்து கவலை தெரிவித்தாகவும், அதன்பேரிலேயே இஸ்லாமிய குடியரசின் மீதான தாக்குதல் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் அமெரிக்காவின் போர்ச்செலவும் அதிகரித்து வருகிறது.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகை செய்யவே அமெரிக்கா இந்த அவகாசத்தை வழங்கியுள்ளதாக ஐநாவுக்கான அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களாக ஈரானும், ஓமானும் தெஹ்ரானில் ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.